திருகோணமலை குச்சவெளி பகுதி மீனவர்கள் ஒரு தரப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பல பொய்யான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கிறார். தமிழர்களையும், பிற இனத்தவர்களையும் கேவலப்படுத்துகிறார். யாழ்ப்பாண மக்களே வெகுவிரைவில் இவரை அடித்து விரட்டுவார்கள் என்று குறிப்பிட்டதை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும், அமைச்சர் சந்திரசேகருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற அமர்வினை தொடர்ந்து சபை ஒத்திவைப்பு வேளையின் போது கிழக்கு மாகாண பகுதியில் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விசேட பிரேரணையை முன்வைத்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்,
'மிகவும் கவலையுடன் சபை ஒத்திவைப்பு வேளையில் இந்த பிரச்சினையை முன்வைக்கிறேன். இந்த பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தியுள்ளது. கல்முனை, கல்முனைகுடி, சாய்ந்தமருது, அம்பாறை மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கடலோர மீனவச் சமூகங்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அமைப்புசார் கொள்ளைக்கூட்டத்தால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
ஆழ்கடலில் பிடிக்கும் மீன்கள் கொள்கையடிக்கப்படுகிறது. மீனவ உபகரணங்கள் அழிக்கப்படுகின்றன. இத்தனை காலமாக இதற்கு எதிராக நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த கொள்ளைச் செயல்களுக்கு தலைமை வகிப்பவரின் பெயரை அனைவரும் அறிவார்கள். அந்த பெயரை இங்கு சொல்வது நாகரீகமல்ல, அவர் களுவாஞ்சிக்குடி பகுதியில் வேகப்படகுகளை கொண்டு இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார். அவர் தனிமனிதரல்ல அவருக்கு பின்னால் பெரிய கொள்ளை கூட்டமே உள்ளது.
முன்னாள் போராளி என்று தன்னை குறிப்பிட்டுக்கொண்டு பாராளுமன்றத்துக்கு வந்து, தற்போது பதவி இழந்துள்ளவர்களின் குழுக்கள் இந்த சம்பவத்தில் தொடர்புப்பட்டுள்ளார்கள். எமது மீனவர்கள் குற்றவாளிகலல்ல, இவர்கள் கடலுக்கு செல்ல அச்சமடைந்துள்ளார்கள் . இந்த கொள்ளை கூட்டத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட கவனம் செலுத்தி பதிலளிக்க வேண்டும்' என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய எம்.ஏ.ஹிஸ்புல்லா முன்வைத்த பிரேரணையை நான் ஆமோதிக்கிறேன். இது நீண்டகால பிரச்சினையாகும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அம்பாறை, சாய்ந்தமருது, ஒலுவில், காத்தான்குடி, திருகோணமலை பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் போது கரையில் உள்ள ஒரு கொள்ளைக்கூட்டம் மீனவர்களை தாக்கி சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, திருகோணமலை பகுதியில் மீனவர் ஒருவர் மீது அண்மையில் துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15 அல்லது 20 நாட்களுக்கு முன்னர் மீனவர் ஒருவர் கடற்படையினரால் தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசிய போது பொலிஸ் அதிகாரி குறிப்பிடுகிறார் வடக்கில் அவ்வாறான முறைப்பாடு ஏதும் பதிவு செய்யவில்லை என்று.
எமது தேசிய தலைவன் வடக்கில் ஆண்ட காலத்தில் எமது படகுகள் அச்சமில்லாமல் கடலுக்கு சென்றன. கடற்படையினர் எம்மவர்களை கொன்றார்கள். இப்போது நிலைமை மோசமாகவுள்ளது. அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய பணித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகள் முட்டாள்களாக இருக்கலாம், இவர்களின் பொய்யால் ஏமாறுவதற்கு தமிழர்கள் முட்டாள்கள் அல்ல, இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இந்த சம்பவம் குறித்து முப்படைகளின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். கிழக்கு மாகாணத்தில் உள்ள இந்த கொள்ளையர் கும்பல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
எனக்கு முன்னர் உரையாற்றிய வசூல் மன்னன், மக்களின் பணத்தை மோசடி செய்துள்ளார். இவர் எங்களை பற்றி போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். இனியும் பைத்தியம் போல் செயற்பட வேண்டாம் என்று அவரிடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம் நீங்கள் பைத்தியம் என்பதை அனைவரும் அறிவார்கள். பெண்களை கண்டால் பைத்தியமாகிவிடுவீர்கள். மலையக மக்களை கேவலப்படுத்தும் நரித்தனமானவன் யார் என்றால் அது நீ தான், இவர் பைத்தியன் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த பைத்தியத்தை யாழ் மக்களே வெகுவிரைவில் அடித்து அனுப்புவார்கள். அதற்கான காலம் வெகுவிரைவில் வரும். செருப்பால் அடித்து அனுப்புவார்கள் என்றார்.
இதன்போது உரையாடுவதற்கு அனுமதி கோரி அர்ச்சுனா கடுமையாக கோரினார். அதற்கு சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் அனுமதி வழங்கவில்லை.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கிழக்கு மாகாண மீனவர்கள் தாக்கப்பட்டமை குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டமிட்ட வகையில் இடம்பெறும் இவ்வாறான குற்றச்செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பணிக்கப்பட்டுள்ளது என்றார்.