அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
22 May,2025
இதை பற்றி நாம் அலட்டி கொள்ளகூடாது. அந்த மக்கள் சந்ததி சந்ததியாக எந்த உரிமையும் அற்ற ஏதிலிகளாகவே இருப்பது அவர்கள் தலைவிதி என விட்டு விடுவதை தவிர வேறு வழியில்லை.
இந்த மக்களை முடிந்த அளவிற்கு அந்தக் குடியிருப்புகளில் இருந்து வெளியே வரச் செய்வதே எங்களால் செய்யக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அங்கேயே இருக்கும் எங்களின் தலைமுறை இந்தச் சூழலுக்கும், இது கொடுக்கும் ஒரு விதமான பெரும் பிரயத்தனங்கள் அற்ற வாழ்க்கை முறைக்கும் நன்கு பழகிவிட்டார்கள். ஆனால் அங்கேயே பிறந்து வளரும் அடுத்த அடுத்த தலைமுறையில் முன்னே போக முயற்சி செய்பவர்கள் இருக்கின்றார்கள். குடியுரிமை இல்லாததால் எம். காம் முடித்தாலும் ஒரு ஆசிரியப் பணி கூட கிடைக்காது என்ற இக்கட்டான நிலையிலும், இந்த இளையவர்கள் பலர் தனியார் துறை நோக்கிப் போக முயல்கின்றார்கள்.
குடியுரிமை பெற்றுத் தரும் ஒரே நம்பிக்கையாக இன்றைய திமுக மட்டுமே இருக்கின்றது. ஜெயலலிதா தன் கடைசி நாட்களில் அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுத் தருவேன் என்று ஆரம்பித்தார். எல்லா இடங்களிலும் சாண் ஏற முழம் சறுக்கிக் கொண்டிருக்கும் எங்கள் இனத்திற்கு இது மட்டும் அமைந்திடுமா என்ன......... அந்த அம்மா திடீரென்று போய்விட்டார். இன்றிருக்கும் அதிமுக மிகவும் பலவீனமானது. அதன் இன்றைய தலைவர்கள் அவர்களின் வாழ்நாள் முழுதும் மாநில அரசியலில் தங்களை ஒரு சக்திகளாக நிலைநிறுத்தவே போராடப் போகின்றார்கள். தமிழ்நாட்டில் திமுகவிற்கு இருக்கும் தீவிர எதிர்ப்பு பிரிவினரின் ஆதரவால் மட்டுமே அதிமுக ஒரு ஓரளவு பலமான கட்சியாக இன்றும் நீடிக்கின்றது. இன்னொரு மாற்றுக் கட்சி வந்தால், அதிமுக பத்தோடு இன்னொன்று ஆகிவிடும். இவர்கள் மத்திய அரசுகளை இனிமேல் கேள்வி கேட்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போகின்றது.
தமிழ்நாட்டு மாநிலத்திற்காக நீச்சல் போட்டிகளில் அங்கேயே, மண்டபம் குடியிருப்பில் என்று நினைக்கின்றேன், பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிள்ளை சில வருடங்களாக பங்குபற்றிக் கொண்டிருக்கின்றார். சமீபத்தில் கூட இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக போட்டியிட்டு தங்கங்களை வென்றிருக்கின்றார். இந்தியக் குடியுரிமை இல்லாவிட்டாலும் கூட, மாநிலத்திற்காக விளையாட முடியும் என்றால், மாநிலத்தில் இருக்கும் சில வேலைவாய்ப்புகளையும் தகுதியான எம்மக்களுக்கு தமிழ்நாட்டு அரசால் ஏன் வழங்க முடியாதுள்ளது என்று தெரியவில்லை.