முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலிகொழும்பிலும் நினைவேந்தல்
18 May,2025
இறுதிப்போரில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாளன இன்று முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,
எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இம்முறையும் 16 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
இந் நிலையில், இன்று (18) காலை கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.