ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை மீளாய்வு செய்ய விசேட பொலிஸ் குழு நியமனம்
22 Apr,2025
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து விசாரணை செய்ய நான்கு பேர் கொண்ட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி,
இந்தக் குழுவிற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமை தாங்குகிறார்.
மீதமுள்ள உறுப்பினர்களில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளர் ஆகியோர் அடங்குவர்.
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை மீளாய்வு செய்ய விசேட பொலிஸ் குழு நியமனம் | Special Police Team Investigate Easter Attack
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதான குழுவின் கீழ் மேலும் பல துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஏற்கனவே அறிக்கையை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
66,000 பக்கங்களுக்கும் அதிகமான அறிக்கையை தொடர்ந்து ஆய்வு செய்யும் போது கண்டறியப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில் புதிய விசாரணைகள் தொடங்கப்படும் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைக்காக ஏப்ரல் 20 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.