விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இலங்கை இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய காரணத்திற்காகவா பிள்ளையான் இலக்கு வைக்கப்படுகிறார். சட்டவிரோதமான முறையில் தான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக பிள்ளையானை பெயர் குறிப்பிடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கண்ணீருடன் பல விடயங்களை பிள்ளையான் என்னிடம் குறிப்பிட்டார். 21 ஆம் திகதி ஜனாதிபதி எந்த சூத்திரதாரியை குறிப்பிட போகிறார் என்பதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சட்டத்தரணி என்ற அடிப்படையில் தான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் எனழைக்கப்படும் பிள்ளையானை சந்தித்து பேசினேன். சட்டவிரோதமான முறையில் தான் பிள்ளையானை அரசாங்கம் கைது செய்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்படுவதாயின் கைது செய்வதற்கான காரணத்தை எழுத்துமூலமாக கைது செய்யப்படுபவரின் குடும்பத்தாருக்கு அறிவிக்க வேண்டும்.
கைது செய்யப்பட்டமைக்கான காரணம் பிள்ளையானின் குடும்பத்தாருக்கு அறிவிக்கவில்லை.பிள்ளையானை சந்திப்பதற்கு அவரது சட்டத்தரணியின் கனிஸ்ட சட்டத்தரணி கடந்த 9 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் கடந்த 11 ஆம் திகதி பிள்ளையானின் குடும்பத்தார் என்னை சந்தித்தார்கள்.அவர்களிடமிருந்து பல தகவல்களை பெற்றுக்கொண்டேன்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் 10 அ(1) பிரிவின் பிரகாரம் தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபரை பார்ப்பதற்கு அவரது குடும்பத்தாருக்கும், சட்டத்தரணிக்கும் அதிகாரம் உண்டு என்பதை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு எடுத்துரைத்து சட்டத்தரணி என்ற அடிப்படையில் பிள்ளையானை சந்திப்பதற்கு அனுமதியை பெற்றுக்கொண்டேன்.
பிள்ளையானுடன் 30 நிமிடங்கள் உரையாடினேன்.இதன்போது நான்கு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் அவ்விடத்தில் இருந்தார்கள். முழுமையான உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.பிள்ளையான் கண்ணீர் மல்க என்னுடன் பேசினார். 'விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி,இலங்கை இராணுவத்துடன் ஒன்றிணைந்து, உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகளை தோற்கடிக்க போராடினேன். அன்று விடுதலை புலிகள் பக்கம் இருந்தவர்களில் ஒருசிலர் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளார்கள்.
ஒருசிலர் வியாபாரிகளாகவும், புலம்பெயர் அமைப்புக்களின் தலைவர்களாகவும் உள்ளார்கள்.இவர்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதில்லை. என்னை மாத்திரம் ஏன் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும். விடுதலை புலிகளை அழிக்க ஒத்துழைப்பு வழங்கிய காரணத்தால் நான் இன்று இலக்குவைக்கப்படுகிறேன்' என்று உணர்வுபூர்வமாக என்னிடம் வினவினார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான பொறுப்புதாரியை தாங்கள் கைது செய்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 12 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை சந்தித்தேன்.இவ்விடயங்கள் குறித்து அவரிடம் வினவினேன்.
ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட வாக்குமூலமளிக்கவில்லை என்று பிள்ளையான் குறிப்பிட்டார்.குண்டுத்தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் ஏதும் அறியவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிடுகிறேன். ஏனெனில் 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் பிள்ளையான் சிறைச்சாலையில் இருந்தார். ஆகவே பிள்ளையான் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று குறிப்பிடுபவர்களின் மூளையை முதலில் பரிசோதிக்க வேண்டும்.
பயங்கரவாதி சஹ்ரானுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அரசியல்வாதிகளை கைது செய்தால் அதில் ஏதேனும் நியாயம் இருக்கும் என்று குறிப்பிட முடியும்.ஆகவே பிள்ளையானை பிரதான சூத்திரதாரி என்று அரசாங்கம் குறிப்பிடுவது நகைச்சுவையானது. ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல உண்மைகளையும், பிரதான சூத்திரதாரியையும் வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த மாதம் 30 ஆம் திகதி குறிப்பிட்டிருந்தார். ஆகவே ஏப்ரல் 21 இக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன.
பொலிஸாரின் கயிற்றை சாப்பிட்டு ஜனாதிபதி இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளார். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிப்பதற்கு பதிலாக சூத்திரதாரியை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பாக இருந்த காலப்பகுதியில் தான் சேயா செவ்மினி என்ற சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் பொறுப்பை கொண்டயா என்பவர் ஏற்றுக்கொண்டார்.
டி.என்.ஏ. பரிசோதனையில் கொண்டயா குற்றவாளியல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் ' இந்த குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் தன்னை கொடூரமாக தாக்கியதால் அவ்வாறு ஏற்றுக்கொண்டதாக' கொண்டயா நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சாட்சியமளித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக பிள்ளையானை மாற்றியமைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.பிள்ளையான் பிரகாரனுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார். ஆகவே அவரை கொண்டயாவின் நிலைக்கு மதிப்பிடுவது அரசாங்கத்தின் தவறாகும். பிள்ளையானை தடுப்புக் காவலில் வைக்கும் ஆவணத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.
இந்த ஆவணத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி ஒருவார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. இந்த தடுப்பு காவல் உத்தரவு பத்திரத்தில் ஜனாதிபதி ஏப்ரல் 11 ஆம் திகதி கைச்சாத்திட்டு விட்டு, ஏப்ரல் 12 ஆம் திகதி கிழக்குக்கு சென்று குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான நபரை கைது செய்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பொய்யை உண்மையை போன்று குறிப்பிடலாம். ஆனால் உண்மையாக்க முடியாது என்றார்.