270 பேர் பலியான இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: மாஜி அமைச்சர் பிள்ளையான் அதிரடி கைது-
09 Apr,2025
இலங்கையில் 2019-ம் ஆண்டு 275 பேரை பலி கொண்ட ஈஸ்டர் தின தற்கொலைப் படை தாக்குதல்கள் மற்றும் இலங்கை தமிழ் எம்பி ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை ஆகிய வழக்குகளில் இலங்கை முன்னாள் இணை அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பிள்ளையான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர் பிள்ளையான். பின்னர் கருணாவுடன் இணைந்து செயல்பட்டார். ஒரு கட்டத்தில் கருணா-பிள்ளையான் இடையே மோதல் ஏற்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியையும் நடத்தினார் பிள்ளையான்.
2008-ம் ஆண்டு இலங்கை கிழக்கு மாகாண முதல்வராகவும் பதவி வகித்தார் பிள்ளையான். முன்னாள் தமிழ் எம்பி ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் சிறையில் அடைக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் இருந்து போட்டியிட்டு எம்பியானார் பிள்ளையான். அப்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அண்மையில் கருணாவுடன் இணைந்து செயல்படுவதாக பிள்ளையான் அறிவித்தார். கருணாவும் பிள்ளையானும் கூட்டாக அறிவித்த சில நாட்களிலேயே பிள்ளையான் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிள்ளையான் கைதுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் 270 பேரை பலி கொண்ட ஈஸ்டர் தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.