நோர்வே 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவி சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தெரிவிப்பு
12 Dec,2025
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நோர்வே சுமார் 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட் தெரிவித்துள்ளார்.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் நோர்வே அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட், 'இலங்கையில் தமது வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள மக்களுக்கு அவசியமான உடனடி உதவிகளை நோர்வே வழங்கிவருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான இருப்பிடம், உணவு, சுகாதாரம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் வசதிகள் என்பன முறையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதும், அதற்குரிய ஒத்துழைப்பை வழங்குவதும் இன்றியமையாததாகும்' எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கையிலுள்ள செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அலுவலகம் என்பவற்றுக்கு நோர்வே அரசாங்கம் சுமார் 2 மில்லியன் டொலர்கள் நிதியை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வாறான பரந்தளவிலான அனர்த்தங்களின்போது நோர்வே போன்ற நாடுகள் முன்வந்து பாதிக்கப்பட்ட சமூகங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான உதவிகளை வழங்கவேண்டியது அவசியம் எனவும் நோர்வே அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.