மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாகப் பலத்த மழை பெய்து வருவதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பதுளை மாவட்டச் செயலாளர் பிரபாத் அபயவர்தன தெரிவித்துள்ளார்.
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்த மக்கள் செவ்வாய்கிழமை (9) பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 14 பிரிவுகள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை பாதிக்கப்படாமல் இருந்த ரிதீமாலியத்த பிரதேசமும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.
பதுளை கலுகேல மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 129 நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சொரனதோட்ட பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேரும், ஊவா பரணகமவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரும், ரிதீமாலியத்தவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேரும், மீகஹகிவுலவில் மண்சரிவு அச்சுறுத்தல்கள் காரணமாக 35 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேரும், ஹாலி-எல பிரதேச செயலாளர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேரும், எல்ல பிரதேசத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேரும் என மொத்தமாக, 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 நபர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் 37 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய பலத்த மழையைத் தொடர்ந்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மொத்தம் 494 மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளை ஆய்வு செய்துள்ளது.
மேலதிகமாக, மேலும் 2,198 இடங்களில் ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காலநிலை சற்று சீராகியிருந்தாலும், நான்கு மாவட்டங்களில் உள்ள 37 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து அமுலில் உள்ளன.
கண்டி மாவட்டத்தில் உடபலாத்த, கங்காவட கோரள, உடதும்பர, தொழுவ, மினிபே, பஹத ஹேவாஹெட்ட, மெததும்பர, தெல்தோட்டை, அக்குரணை, கங்கா இஹல கோரள, பஹததும்பர, யட்டிநுவர, தும்பனை, உடுனுவர, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, பஸ்பாகே கோரள, பன்வில, ஹதரலியத்த, குண்டசாலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல, ரம்புக்கணை, அரநாயக்க, புலத்கொஹபிட்டிய, எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் ரிதீகம, மல்லாவபிட்டிய, மாவத்தக பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தில் நாவுல, ரத்தோட்டை, அம்பன்கங்க கோரள, உகுவெல, வில்கமுவ, யட்டவத்த, மாத்தளை, பல்லேபொல, லக்கல-பல்லேகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வேளை நேற்று மாலை வரை தித்வா புயலின் தாக்கத்தினால் 339 பேர் உயிரிழந்துள்ளதோடு, 210 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 495 093 குடும்பங்களைச் சேர்ந்த 1, 703 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 563 குடும்பங்களைச் சேர்ந்த 84 674 பேர் 866 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 5588 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 87 496 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.