அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்க இரு அவசர தொலைபேசி எண்கள் 1938/1929
அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் உடனடியாக தெரிவித்துக் கொள்ள இரண்டு கட்டணமில்லா தொலைபேசி சேவைகள் தற்போது 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுடன் இணைந்துள்ள தேசிய மகளிர் சபையின் 1938 பெண்கள் உதவி அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 சிறுவர் உதவி அவசர தொலைபேசி இலக்கங்கள் மூன்று மொழிகளில் இலவசமாக செயல்படுகின்றன.
பெண்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1938
சிறுவர்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1929
இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் இன்றியே, 24 மணி நேரமும் அழைத்து தகவல் பகிர முடியும்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, நலன், அவசர உதவி மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இவ்விரு ஹாட்லைன்களும் முக்கிய பங்கு வகிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தேவைப்படும் தருணங்களில் உடனடியாக தகவல் தெரிவித்து பாதுகாப்புக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்கு 7,989 இராணுவ வீரர்கள் தயார் நிலையில் - இராணுவத் தளபதி
மேல் மாகாணத்தில் ஏற்படக்கூடும் என்று எதிர்வுகூறப்படுகின்ற அனர்த்த நிலைமையில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக 7,989 இராணுவ வீரர்கள் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை கொண்டு செல்வதற்கும் முப்படைகள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன்படி, நாடு முழுவதும் 24,156 பாதுகாப்பு வீரர்கள் 2,453 பேரின் உயிர்களைக் காப்பாற்றி 5,400 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இந்த மீட்புப் பணிகளுக்காக 23 இராணுவ கவச வாகனங்கள், 60 பெபல் வாகனங்கள் மற்றும் 32 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தேவையான மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படை தற்போது பலாலி, ரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் வீரவில தளங்களில் 07 ஹெலிகொப்டர்களை தயார்படுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் 488 பாதுகாப்பு மையங்களில் உள்ள 43,925 பேருக்கு உணவு மற்றும் ஏனைய தேவையான வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் பதுளை, பல்லேகலே, திகன, மருதானை, களனிமுல்ல மற்றும் மட்டக்குளிய ஆகிய இடங்களில் இராணுவம் 08 உணவு தயாரிப்பு தளங்களை நிறுவியுள்ளதுடன். அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு முகாமிலும் இடம்பெயர்ந்தவர்களுக்காக உணவு தயாரிப்பதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மேலும், 2025-11-27 முதல் 2025-11-29 வரை மேற்கொள்ளப்பட்ட விமானப்படை நடவடிக்கைகளில் 71 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், இடம்பெயர்ந்தவர்களுக்கு 2,565 கிலோகிராம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுகளை விமானம் மூலம் அவர்களுக்குத் தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் 80 பேர் கொண்ட குழுவுடன் இந்திய விமானப்படையின் IL-76 விமானம் இன்று காலை நாட்டை வந்தடைந்தததுடன், தற்போது கொழும்பு துறைமுகத்தில் உள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தின் இரண்டு விமானங்கள் கம்பஹா மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் அனர்த்த நிலைமையைக் கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மேலும் தெரிவித்தார்.