பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். அப்போது பொருளாதார ரீதியில் நாங்கள் முன்னேற்றமடைவோம். இச்சட்டத்தை இரத்துச் செய்வதாக அரசாங்கம் கூறினாலும் அது எப்போது நடக்கும் என்பதில் சந்தேகம் காணப்படுகிறது. இது தொடர்பிலும் தெளிவான பதிலளிப்புகள் அவசியமாகும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் மலையக மக்களுக்கு நல்ல செய்தியை குறிப்பிட்டு, சம்பளத்தை அதிகரித்துள்ளது. இதற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு பல கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிதி ஒதுக்கியுள்ளமைக்கான காரணத்தை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை.
எமது வடக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்கள் ஆரம்பிக்கப்படும் போது அது பல ஏக்கர் காணிகளை கடந்து செல்லும் நிலைமையே உள்ளது. மூன்று இலட்சம் பேர் மக்களை தாங்கியிருந்த மெனிக் பாம் இப்போது இராணுவம் அந்த முகாமை கைப்பற்றியுள்ளது.
இது போன்று முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களின் பல ஏக்கர் காணிகளை அபகரித்து இராணுவத்தினர் வருமானம் ஈட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
உதாரணத்திற்கு மெனிக்பாம் வீதியை பயன்படுத்தும் போது ஒரு கிலோ மீற்றர் அளவுக்கு செத்தல் மிளகாயை காயவைக்கும் இராணுவத்தினரை நான் காண்கிறேன்.
எங்களுடைய மக்களின் நிலங்களை அபகரித்து, போர் காலத்தில் எமது மக்களின் கால்நடைகளை அபகரித்துள்ளனர். இராணுவத்தினர் ஏ-9 வீதியில் சகல இடங்களிலும் உணவகங்கள், சலூன்களை நடத்துகின்றனர்.
இவ்வாறு எமது மக்களின் காணிகளை அபகரித்துள்ள இராணுவத்தினருக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்த வருமானத்தை அவர்கள் என்ன செய்கின்றார்கள்.
அதற்கு கணக்கு காட்ட முடியுமா? எங்களுடைய மக்களின் கால்நடைகளை பயன்படுத்தும்இ விவசாய நிலங்களை பயன்படுத்தும் இராணுவத்தினரின் வருமானம் எங்கே போகின்றது என்று கூற முடியுமா? அந்த வருமானங்கள் யாருக்கு போகின்றது.
ஜனாதிபதி சில காணிகளை விடுவித்துள்ளார். ஆனால் இராணுவத்தினரின் கைகளில் உள்ள காணிகளை விடுவித்து தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் அதனை செய்யுங்கள்.
எமது மக்கள் அரசாங்கத்தின் மீதும், ஜனாதிபதி மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், இராணுவத்தினரால் நடக்கும் இவ்வாறான சம்பவங்களால் மக்கள் நெருக்கடிக்குள் இருக்கும் உணர்வில் இருக்கின்றனர்.
இதனால் இராணுவத்தினருக்கு கூடுதலான நிதியை ஒதுக்கினாலும் வருமானம் ஈட்டும் இராணுவம் அந்த பணத்தை என்ன செய்கின்றது என்று கேட்கின்றேன்.
வருமானத்தை ஈட்டுவதற்கான வழிகளை இராணுவத்தினருக்கு ஏற்படுத்தினால் ஏன் இந்தளவு நிதியை அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்காக ஒதுக்க வேண்டும் என்றும் கேட்கின்றோம்.
இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். அப்போது பொருளாதார ரீதியில் நாங்கள் முன்னேற்றமடைவோம். இச்சட்டத்தை இரத்துச் செய்வதாக அரசாங்கம் கூறினாலும் அது எப்போது நடக்கும் என்பதில் சந்தேகம் காணப்படுகிறது. இது தொடர்பிலும் தெளிவான பதிலளிப்புகள் அவசியமாகும் என்றார்.