இலங்கையின் உடைக்கப்படும் இந்திய கடற்றொழில் படகுகள்! வெளியாகியுள்ள தகவல்
01 Nov,2025
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களின்; படகுகள் உடைக்கப்படுவதாக இந்திய பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை கடற்படையிரால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,500க்கும் மேற்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினாலும் , சிறை தண்டனை மற்றும் அபராதம் கட்டியப் பிறகும் விடுவிக்கப்பட்டனர் எனினும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை.
அந்தவகையில் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 200 படகுகளை நாட்டுடமையாக்கியுள்ளன.
நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகள் தலைமன்னார், காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகிய மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் உடைத்து விறகு மற்றும் மரக்கட்டைகளாக்கும் பணிகளை இலங்கையின் மீன்வள திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு 8 லட்சம் ரூபாயும், நாட்டுப்படகுகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.