வடக்கு, கிழக்கில் படைத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, வலிகாமம் வடக்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.
‘‘எமது பூர்வீக நிலத்தை எம்மிடம் மீளக் கையளியுங்கள்’’ எனும் கோஷத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் வலிகாமம் வடக்கு படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக அமைப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
வலிகாமம் வடக்கில் படையினரால் சுவீகரிக்கப்பட்டு கடந்த 35 வருட காலமாக கையகப்படுத்தப்பட்டுள்ள தமது நிலங்கள் மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஜனநாயகத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதாக வாக்குறுதியளித்து ஆட்சி பீடமேறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னைய அரசாங்கங்களின் கொள்கையையே பின்பற்றுவாராயின் அது மக்கள் வழங்கிய ஆணைக்கு முற்றிலும் முரணானதாகும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதப்பட்ட பகிரங்க கோரிக்கை கடிதமும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் “தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவின் வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் அனைவரும் போரின் விளைவாக 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தனர்.
2009ஆம் ஆண்டு நடுப் பகுதியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் எமது பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதுடன் நாம் மீண்டும் எமது நிலங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
அதன் விளைவாக நாம் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலுமே வசித்து வந்தோம். அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் காணி கையகப்படுத்தல் சட்டத்தின் 5(1) ஆம் பிரிவின் கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக எமக்கு சொந்தமான பரந்துபட்டளவிலான காணிகளை கையகப்படுத்தியது.
அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எமது பூர்வீகக் காணிகள், வாழ்வாதார வழங்கல், விவசாயக் காணிகள், மீன்பிடிப் பகுதிகள், மத வணக்கஸ்தலங்கள் என்பன உள்ளடங்கியுள்ளன. இவ்வாறான பின்னணியில் எமது காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் யுத்தம் இடம்பெற்ற மூன்று தசாப்த காலங்களில் படைத் தரப்பினரால் பொதுமக்களது காணிகள் அதிபாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் சுவீரிக்கப்பட்டிருந்தன. பலாலி படைத்தளத்தை அண்மித்த வலிகாமம் வடக்கு பகுதியில் பெருந்தொகையான காணிகள் படைத்தரப்பினரால் 1990ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் சுவீகரிக்கப்பட்டன.
3,500 ஏக்கர்களுக்கும் அதிகளவான காணிகள் பலாலி படைத்தளத்தை சூழவுள்ள பகுதிகளில் சுவீகரிக்கப்பட்டிருந்தன. யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்திருந்தனர். இதனைப் பயன்படுத்தி காணிகள் படைத்தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டன.
இதேபோன்றுதான் வடக்கு, கிழக்கில் ஏனைய மாவட்டங்களிலும் படையினரின் முகாம்களை அமைப்பதற்கு என்றும் முகாம்களை பாதுகாப்பதற்கு எனவும் பெருமளவான காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தன.
விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை தடுக்கும் வகையிலும் படையினரின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும் அதிபாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அந்த சந்தர்ப்பத்திலேயே வலியுறுத்தப்பட்டு வந்தது.
ஆனாலும் யுத்தம் இடம்பெற்றமையினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு படைத் தரப்பினர் மறுத்து வந்தனர். அத்துடன் அந்தக் காலப் பகுதிகளில் இராணுவ முகாம்களுக்கு அருகிலோ அல்லது படைத்ததளங்களுக்கு அண்மையிலோ மக்கள் குடியேற முடியாத நிலைமை காணப்பட்டு வந்தது.
இதனால் காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து படைத்தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்தது.
யுத்தம் அற்ற சூழ்நிலையில் படைத்தரப்பினர் பொதுமக்களது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று சர்வதேச தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டன. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளிலும் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
ஆனாலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கமானது வடக்கு, கிழக்கில் பொதுமக்களது காணிகளை விடுவிப்பதற்கு முன்வந்திருக்கவில்லை. மாறாக, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளிலேயே அன்றைய அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமானது வடக்கு, கிழக்கில் அதிபாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் சுவீகரிக்கப்பட்டிருந்த காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தது. அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
அன்றைய அரசாங்க காலப் பகுதியில் வலிகாமம் வடக்கு உட்பட பல பகுதிகளிலும் கணிசமான அளவு காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆனாலும் பெருமளவு காணிகள் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் படையினர் வசமே இருந்து வந்தன.
அதன்பின்னர் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களின் போதும் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
கடந்த வருடம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களது காணிகள் மீளக் கையளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தேசிய மக்கள் சக்தியானது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு முன்னரே வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.
காணி சுவீகரிப்பு பிரச்சினை, காணாமல் போனோர் பிரச்சினை என்பவற்றுக்கு தமது அரசாங்கம் தீர்வு காணும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்தது. இதன் காரணமாக புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனால் வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் வழங்கியிருந்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதேபோன்று தான் கிழக்கு, மட்டக்களப்பு மாவட்டம் தவிர ஏனைய வடக்கு, கிழக்கு மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றிருந்தது.
தமது பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வுகாணும் என்ற நம்பிக்கையிலேயே வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பெருமளவானோர் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்திருந்தனர்.
ஆனால், புதிய அரசாங்கமானது அந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியிருக்கின்றது. இதன் காரணமாகவே காணி விடுவிப்பு தொடர்பில் வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் தற்போது கொழும்பில் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
அரசாங்கம் காணி விடுவிப்பு தொடர்பான தமது வாக்குறுதிகளை நிறைவேற்றாமையினாலேயே தாம் வழங்கிய ஆணைக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதாக தமிழ் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். காணி விடுவிப்பு தொடர்பில் போராட்டத்திலும் இத்தகைய குற்றச்சாட்டையே முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
காணி சுவீகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி வழங்கிய அரசாங்கம் வடக்கில் பொதுமக்களது காணிகளை மேலும் சுவீகரிக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி அரசாங்கம் காணி விவகாரம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. வடக்கில் மொத்தமாக உள்ள 5,940 ஏக்கர் காணிகளை மூன்று மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராத விடத்து அவற்றை அரச காணிகளாக பிரகடனப்படுத்தும் வகையிலேயே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஆனாலும் எதிர்ப்புகள் காரணமாக இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்தச்செய்யப்பட்டிருக்கின்றது.
எனவே, அரசாங்கமானது சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களது காணிகளை விடுவிப்பதற்கு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றோம்.