டோக்கியோ சீமெந்து திருகோணமலையில் 1 மில்லியன் தொன் ஆலையை நிறுவி கொள்ளளவை மேம்படுத்தியுள்ளது
09 Jul,2025
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த சீமெந்து உற்பத்தி ஆலையை திருகோணமலையில், தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அண்மையில் திறந்து வைத்தார். முழுமையாக தன்னியக்கமயப்படுத்தப்பட்ட, உயர் தொழினுட்பத்திறன் கொண்ட சீமெந்து அரைக்கும் ஆலையினூடாக, டோக்கியோ சீமெந்தின் மொத்த உற்பத்தி கொள்ளளவில் 1 மில்லியன் மெட்ரிக் டொன் சேர்க்கப்பட்டுள்ளது. அதனூடாக, வருடமொன்றில் 4 மில்லியன் மெட்ரிக் டொன் சீமெந்து உற்பத்தி மேற்கொள்ளக்கூடிய வசதியை கொண்ட மாபெரும் சீமெந்து உற்பத்தியாளராக திகழ்கிறது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் நவோகி கமோஷிடா, ஜப்பானிய தூதரகத்தின் நிதி இணைப்பாளரும் முதல் செயலாளருமான டகாஃபுமி நகாநிஷி, கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோருடன், அரசாங்க அதிகாரிகளும், அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் PC மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், டோக்கியோ சீமெந்தின் தொழினுட்ப பங்காளரான மிட்சுபிஷி உபே சீமெந்து கோர்பரேஷனின் முகாமைத்துவ நிறைவேற்று அதிகாரி மசாஹரு சன்சுயி ஆகியோரும் அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்து கொண்டனர். பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீற் மற்றும் சீமெந்து சார் புத்தாக்கமான தயாரிப்புகள் உற்பத்தியில் ஈடுபடும் இலங்கையின் மாபெரும் உற்பத்தியாளராக டோக்கியோ சீமெந்து குழுமம் திகழ்கிறது. முற்றிலும் உள்நாட்டு நிறுவனம் எனும் வகையில், டோக்கியோ சீமெந்து, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் உள்ளக அங்கமாக அமைந்திருப்பதுடன், நிர்மாணத்துறையின் நம்பிக்கையை வென்ற விநியோகத்தராகவும் திகழ்கிறது. பாலங்கள், புகையிரத பாதைகள் மற்றும் உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகள் போன்றன முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகள் நிர்மாணத்தில் டோக்கியோ சீமெந்து தயாரிப்புகள் முக்கிய பங்காற்றி வலிமைப்படுத்தி, இலங்கையின் தொழிற்துறை முன்னேற்றத்தின் முக்கிய அடையாளமாகவும் அமைந்துள்ளது