பொலிஸ் காவலில் 5 ஆண்டுகளில் 49 மரணங்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்
03 Jul,2025
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 49பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மரணமடைந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
நேற்று (02) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மோதல்களில் 30பேர் மரணித்துள்ளதோடு, அதில் 19 பேர் காணவில்லை எனவும் இது பாரதுரமான நிலைமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 2020 -2025இற்கு இடையிலான ஐந்து ஆண்டு காலப்பகுதியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களே மரணமடைந்துள்ளனர்.
அதேவேளை சிறையில் இருக்கும்போது ஏற்படும் உச்ச சித்திரவதைகளின் போதே இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஒரு சிலரால் செய்யப்படும் இந்த சம்பவங்கள் முழு கட்டமைப்பையும் சீர்குலைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது
இந்த நாட்டில் எந்தவொரு நபருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு சார்பாகவும் எதிராகவும் செயற்பட உரிமை உண்டு.
பொதுமக்கள் குற்றங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதால் அவர்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் தகவல்களை வழங்க தயங்குகிறார்கள் என்றும் மனித உரிமைகள் ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உதாரணமாக, சில பொலிஸ் நிலையங்களில் 'சந்தேகத்தின் பேரில் கைது' என்று குறிப்பிடுகின்றனர், ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது என்று சொல்ல முடியாது.
கைது செய்ய வேண்டுமென்றால், தவறு செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.