ஜப்பானில் பிரேசிலின் செல்வாக்கு மிக்க 30 வயதுடைய அமண்டா போர்ஜஸ் டா சில்வா என்ற பெண்ணின் மரணம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமண்டா போர்ஜஸ் டா சில்வா ஜப்பானை நேசித்ததோடு, பார்முலா 1 கார் பந்தய ரசிகையுமாக இருந்துள்ளார்.
இவர் ஜப்பானில் பாதுகாப்பாக இருப்பதாக தனது தாயாரிடம் கூறியிருந்த நிலையில், தனது நாட்டுக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள நரிட்டா நகரத்தில் வாடகை குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் புகையை சுவாசித்து மூச்சு திணறி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் சந்தேகத்துக்கிடமாக காணப்பட்டதோடு, பின்னர் குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டது. அதில், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய, வேலையில்லாத 31 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் கட்டடத்துக்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 31 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க முயற்சிக்காமல் அவர் குடியிருப்பை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கையடக்க தொலைப்பேசி, நகைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் உட்பட பல தனிப்பட்ட பொருட்களும் காணாமல் போயுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் பொலிஸாரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளன.
அமண்டா போர்ஜஸ் டா சில்வா போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும், அவரது மரணம் வேண்டுமென்றே சம்பவிக்கப்பட்டதா என ஜப்பானிய பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் பிரேசிலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
பிரபலமான பார்முலா 1 கார் பந்தய ரசிகையான அமண்டா போர்ஜஸ் டா சில்வாவை இன்ஸ்டாகிராமில் சுமார் 13,000 பேர் பின்தொடர்கின்றனர்.
தற்போது ஜப்பானில் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயல்களை வெளிநாட்டவர்கள் செய்வதாக சமூக ஊடகங்களில் தேசிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.