இலங்கையில் குரங்கு சேட்டையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கிய சம்பவம்
10 Feb,2025
தலைநகர் கொழும்பு, காலே, ரத்னபுரா என பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. மின் தடையால் குடிநீர் விநியோகிக்கும் பணி முடங்கியது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களும் மின் தடையால் பாதிப்புக்குள்ளாகின. அந்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மின் தடையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மின் வாரிய அதிகாரிகள் மின் தடைக்கான காரணம் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதில், கொழும்புவின் புறநகர் பகுதியான பாணந்துறை மின்விநியோக நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது குரங்கு ஒன்று ஏறி விளையாடியபோது டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது. இதில், குரங்கு மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு உயிரிழந்ததது.
அதைத்தொடர்ந்து மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் ஐந்து மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மின் விநியோகம் படிப்படியாக சீரானது. மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின் விநியோகம் வழங்க முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இது குறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் குமர ஜெயக்கொடி, பாணாந்துறையில் உள்ள துணை மின் நிலையத்தில் குரங்கு புகுந்து மின் கட்டமைப்பை சேதப்படுத்தியதால் மின் தடை ஏற்பட்டதாக விளக்கமளித்தார். இந்த மின் தடைக்கு இலங்கை மின்வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய குரங்கை விரட்டாமல் வீடியோ எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.