தூக்கியெறியப்பட்ட கடந்தகால அரசாங்க அரசாங்கத்தின் தீர்மானம்: எரிசக்தி அமைச்சர் அதிரடி
24 Dec,2024
கடந்த அரசாங்க காலப்பகுதியில் மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 62 பேர் சகல சலுகைகளுடனும் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் (Eng. Kumara Jayakody) விசேட உத்தரவின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சி காலத்தில் இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாகக் கூறி தொழிற்சங்கங்கள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தை ஆரம்பித்தன.
மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடமையை செய்யாமல் தவிக்கும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி, இலங்கை மின்சார சபையின் அறுபத்திரண்டு ஊழியர்களின் பணிகள் இடைநிறுத்தப்பட்டது.
எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் விசேட உத்தரவின் பேரில் அந்த ஊழியர்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, இழந்த சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு தண்டனைகள் மற்றும் இடமாற்றங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.