இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
19 Dec,2024
பாலஸ்தீனிய பிரஜை ஒருவரை கொலை செய்து அவரது உடலை இழிவுபடுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேலிய இராணுவ உத்தியோகத்தரான கெல் ஃபெரன்புக் (Gal Ferenbook) என்பவர் இலங்கையில் தங்கியுள்ளதாகத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை குற்றங்களுக்கான நீதிக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஹிந்த் ரஜாப் என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த நபரைக் கைது செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
ஏலவே அந்த நபருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த நபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையை விடுக்குமாறு இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறையினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஹிந்த் ரஜாப் அமைப்பின் வெளிப்படுத்தல் தொடர்பில் எமது செய்தி சேவை காவல்துறையினரிடம் வினவியது.
இதற்குப் பதிலளித்த காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க, வேறு நாடொன்றில் குற்றச்செயல்களைப் புரிந்த ஒருவர் இலங்கைக்குள் நுழைந்திருப்பாராயின் அது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக காவல்துறையினருக்கு அறியப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
எனினும் குறித்த இஸ்ரேலிய இராணுவ உத்தியோகத்தர் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எந்த தகவலையும் இதுவரையில் வழங்கவில்லை எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.