ஸ்பெயினில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
06 Dec,2024
உடரட்ட மெனிகே தொடருந்தில் பயணித்து இயற்கை அழகை கையடக்க தொலைபேசியில் பதிவுசெய்த வெளிநாட்டு பெண் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவரது கையடக்க தொலைபேசியும் திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற உடரட்ட மெனிகே தொடருந்தில் பயணித்த ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவருக்கு இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் வீதிக்கு அருகில் இருந்த குறித்த இரண்டு இளைஞர்கள் தனது கையை தடியால் தாக்கினர் எனவும், இதனையடுத்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி கீழே விழுந்துள்ளது எனவும், தனது தலைபகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது எனவும் குறித்த பெண் எல்ல சுற்றுலா பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து, விசாரணை வேட்டையை முன்னெடுத்த பொலிஸார் அன்று இரவு சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டங்களில் வசிக்கும் 23-26 வயதுடைய இரு சந்தேக நபர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.