நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து இலங்கையில் புதிய பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்றனர்
19 Nov,2024
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலில் என்பிபி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிபர் திசநாயக தலைமையில் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி வெற்றி பெற்று, அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்றார். இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு கடந்த 14ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 225 இடங்களில் 159 தொகுதிகளை என்பிபி கூட்டணி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில், புதிய அரசின் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதில், அதிபர் திசநாயக முன்னிலையில், புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே அதிபர் திசாநாயக அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் 18 பேர் புதிதாக நேற்று பதவியேற்றனர். நிதி மற்றும் பாதுகாப்பு துறையை அதிபர் திசநாயக தக்க வைத்துக் கொண்டார். இலங்கை அரசியலமைப்பின்படி 30 பேர் கொண்டு அமைச்சரவையை நியமிக்கலாம். ஆனால் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, பொதுமக்களின் வரிப்பணத்தை மிச்சப்படுத்த 21 பேர் கொண்ட அமைச்சரவையாக அதிபர் திசநாயக சுருக்கி உள்ளார்.
இதில் 12 பேர் புதுமுகங்கள். 8 பேர் ஏற்கனவே பல்வேறு அமைச்சரவை பதவியை வகித்தவர்கள். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சரோஜா சாவித்ரி பால்ராஜ், மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ராமலிங்கம் சந்திரசேகரன் ஆகிய இருவரும் தமிழர்கள். ராமலிங்கம் சந்திரசேகரன் தமிழில் சத்திய பிரமாணம் செய்தார். சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள தெற்கு பகுதியில் இருந்து பல கட்சி போராட்டங்களை தாண்டி அமைச்சரானவர் சரோஜா பால்ராஜ். புதிய அமைச்சர்களுக்கு அதிபர் திசநாயக வாழ்த்து தெரிவித்தார்.