ஜனாதிபதி அநுர குமாரவின் படத்துடன் போலி நாணயத்தாள்...!
05 Nov,2024
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்(anura kumara dissanayake) உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த நாணயத்தாளை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று(05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
இதேவேளை இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்த நாணயத்தாள் போலியானது எனவும் எடிட் செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க(Ravi Karunanayaka) செயற்பட்டதுடன் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரன்(Arjun Mahendran) கடமையாற்றி இருந்தார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் அச்சிடப்பட்ட திகதியாக கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதியே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இதுவரை நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.