இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன்!
03 Nov,2024
2024 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான அமைச்சின் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மொத்தக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் 503 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இதில் 275.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அசல் திருப்பிச் செலுத்துதலுக்காகவும், 227.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வட்டி செலுத்துதலுக்காகவும் ஒதுக்கப்பட்டது.
2022 ஏப்ரல் 12 ஆம் திகதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் இடைக்காலக் கடன் நிறுத்தக் கொள்கைக்கு இணங்க, இருதரப்பு மற்றும் வணிகக் கடனாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்ட கடன்களுக்கான வெளிப்புறக் கடன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக , 2024 ஜூன் மாத நிலவரப்படி, செலுத்தப்படாத கடன் சேவையானது 5.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வட்டி 2.53 பில்லியன் டொலர்களாகவும் காணப்படுவதாகவும் நிதி நிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.