கொழும்புவில் இந்தியா – இலங்கை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்: தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க இலங்கைக்கு அழுத்தம்!
30 Oct,2024
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. மீன்பிடி தொழில் தொடர்பான இந்தியா – இலங்கை கூட்டு செயற்குழுவின் 6வது கூட்டம் நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இந்திய மீன்வளத்துறையின் செயலர் டாக்டர் அபிலாஷ் லிக்கி தலைமையிலான குழு பங்கேற்றது.
இந்திய வெளியுறவு அமைச்சகம், தமிழ்நாடு கடலோர காவல்படை, ஒன்றிய மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரிகளும், இலங்கை சார்பில் கடற்படை, கடலோர காவல்படை, மீன்வளத்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சட்டத்துறைகளின் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இலங்கை அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் குழு விவரித்தது.
தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதும், இலங்கை நீதிமன்றத்தில் அவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிப்பது பற்றியும் இந்திய அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இக்கூட்டத்தின் இறுதியில் இந்திய – இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு இலங்கை அரசிடம் இந்திய தரப்பு வலியுறுத்தியுள்ளது.