பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இமாம் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையினை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21 திகதி வரை ரவி செனவிரத்னவுக்கு 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு தகவல்களுக்கமைய ரவி செனவிரத்ன செயற்பட்டிருந்தால் மிலேட்சத்தனமான குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தேர்தல் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களின் பெயர்கள் இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் இவ்விரு அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.
நாட்டு மக்களின் சிந்திக்கும் மற்றும் தகவலறியும் உரிமைகளை ஜனாதிபதி வேண்டுமென்றே மீறியுள்ளார். அரசியலமைப்பின் 38 ஆவது ஏற்பாடுகளை மீறியுள்ள ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வர முடியும். குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
புறக்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அல்விஸ்' அறிக்கையை பகிரங்கப்படுத்தி அறிக்கையின் பிரதான உள்ளடக்கங்களை குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி சிறந்தவர்களையும், அறிவானவர்களையும் உயர் பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். ஜனாதிபதி பதவியேற்றவுடன் மூன்று உயர் பதவிகளுக்கு நியமனங்களை வழங்கினார். அதில் இரண்டு பதவிகளுக்கு நியமித்தவர்கள் அந்த பதவிக்கு தகுதியற்றவர்கள்.
ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள நபர் அந்த பதவிக்கு தகுதியற்றவர். பதவிக்கான பொறுப்பினை ஜனாதிபதியின் செயலாளர் தெரிந்திருந்தால் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிபுனராட்சி இன்று அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பார்.
பொதுத்தேர்தல் திகதி தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் சூழல் காணப்படுகிறது. வாக்கெடுப்பு திகதியில் பிரச்சினை காணப்படுகிறது. ஆகவே இதற்கு ஜனாதிபதியின் செயலாளர் பொறுப்புக்கூற வேண்டும். ஆகவே தகுதியற்றவரே ஜனாதிபதி செயலாளராக உள்ளார்.
பொலிஸ் விசாரணையின் பிரதான குற்றவாளியாக கருதப்படும் நபரையே ஜனாதிபதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளார். தேர்தல் காலத்தில் தனக்கு ஆதரவாக செயற்பட்டவர்களையே ஜனாதிபதி பாதுகாக்க முயற்சிக்கிறார்.இதுவே உண்மை.
ஒருமாத காலத்திலேயே இந்த அரசாங்கம் பாரதூரமான தவறிழைத்துள்ளது. இந்த இரண்டு அறிக்கைகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு. தனது சகாக்களை பாதுகாக்க ஜனாதிபதி அறிக்கைகளை பகிரங்கப்படுத்தவில்லை. ஆகவே ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மக்களின் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கத்தை அறிந்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஜனாதிபதி நாட்டு மக்களின் சிந்திக்கும் மற்றும் தகவலறியும் உரிமைகளை மீறியுள்ளார். ஆகவே ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளார். அரசியலமைப்பின் 38 ஆவது ஏற்பாடுகளை மீறியுள்ள ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வர முடியும்.
குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் இரண்டு தாக்குதல்தாரிகளின் தந்தையான தொழிலதிபர் இப்ராஹிமை பாதுகாப்பதற்காக விசாரணைகளை திரிபுப்படுத்துவதற்காகவா ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகரவை ஜனாதிபதி தன்னுடன் இணைத்துக் கொண்டார் என்ற சந்தேகம் காணப்படுகிறது.
அஸ்விஸ் விசாரணை அறிக்கையில் ரவி செனவிரத்னவுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை மேற்கொண்டு அவருக்கு தண்டனையளிக்குமாறும், அத்துடன் பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடைய 17 உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். குற்றவாளி தலைமையில் எவ்வாறு நியாயமான விசாரணைகளை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகளை தெரிந்துக் கொள்ளும் தனியுரிமை கத்தோலிக்க சபைக்கு மாத்திரம் கிடையாது. ஏனெனில் குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் கத்தோலிக்கர்களை போன்று ஏனைய மதத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும்.
கடந்த காலங்களை காட்டிலும் தற்போது சிறந்த முறையில் விசாரணைகள் இடம்பெறுவதாக கத்தோலிக்க சபை குறிப்பிடுகிறது. விசாரணைகளை மேற்கொண்ட அறிக்கைகளில் சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே இவர்களின் தலைமையில் சிறந்த விசாரணைகளை எதிர்பார்க்க முடியுமா ? என்றார்