தமிழர்கள் மீனவர்கள் - கடற்படை மோதல்.. உயிரிழந்த இலங்கை மாலுமி.. இந்தியாவுக்கு சம்மன்
03 Jul,2024
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இந்திய மீனவர்களின் படகை பறிமுதல் செய்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் உள்பட 10 பேரை கைது செய்த நடவடிக்கையின்போது இலங்கை கடற்படை மாலுமி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இலங்கை அரசு இந்திய அதிகாரிக்கு சம்மன் அனுப்பி உள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே நீண்டகாலமாக பிரச்சனை நீடித்து வருகிறது. குறிப்பாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் வலையை வெட்டுவது, படகை பறிமுதல் செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன
இந்நிலையில் தான் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த 24ம் தேதி இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களின் படகை பறிமுதல் செய்தனர். அதாவது இலங்கையின் வடக்கு மாகாணமான ஜப்னா பெனின்சுலாவில் காங்கேசன்துறை உள்ளது. இங்குள்ள குடாநாட்டில் இந்தியர்களின் மீனவர்களை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்யும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது தான் இலங்கையின் மாலுமி உயிரிழந்துள்ளார். இதையடுத்து 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது கைதான 10 பேரில் 8 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதில் 7 பேர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் கடலூரை சேர்ந்தவர். மேலும் 2 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் தான் படகு பறிமுதல் சம்பவத்தின்போது திடீரென்று இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இலங்கை கடற்படை மாலுமி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தான் இலங்கை கடற்படையின் மாலுமி உயிரிழந்தது தொடர்பாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதாவது கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நேரில் அழைத்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம், அந்நாட்டு மாலுமியின் மரணம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்துக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.