இலங்கையில் சூதாட்ட இணையத்தளமொன்றை நடத்தி நிதி மோசடி! கைது செய்யப்பட்ட 60 இந்தியர்கள்
27 Jun,2024
இலங்கையில் (Sri Lanka) பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 60 இந்தியர்களை (Indians) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று (27) கைது செய்துள்ளனர்.
இதன்படி, தலங்கம (Thalangama), மாதிவெல (Madiwela) மற்றும் நீர்கொழும்பு (Negombo) ஆகிய பகுதிகளில் வைத்து குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சந்தேக நபர்களிடமிருந்து 135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சூதாட்ட இணையத்தளமொன்றை குறித்த தரப்பினர் இலங்கையில் நடத்தி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி முதல் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது, சீனா (China), பிலிப்பைன்ஸ் (Philippines), மாலைதீவு (Maldives), பாகிஸ்தான் (Pakistan), இந்தியா மற்றும் நேபாளம் (Nepal) உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சமூக ஊடகங்கள் ஊடாக கைது செய்யப்பட்ட தரப்பினர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.