இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த தகவலை இன்று (21) தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் உள்ள மருத்துவர்களில், 25 சதவீதமானோர் ஏற்கனவே வெளிநாட்டில் வேலை தேடுவதற்கான முனைப்புக்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் கோவிட் தொற்று நோயைத் தொடர்ந்து, இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், சராசரியாக 200 மருத்துவர்கள் வேறொரு நாட்டில் பணிபுரிய இடம்பெயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 1,800 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க (Samil Wijesinghe) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அரசாங்க சுகாதார அமைப்பில் பணியாற்றும் 25 சதவீதமான வைத்தியர்கள் வெளிநாடுகளில் வேலை தேடுவதற்கு தேவையான பரீட்சைகளில் ஏற்கனவே சித்தியடைந்துள்ளனர்.
எண்ணிக்கையை பொறுத்தவரையில் இலங்கையின் சுகாதாரத்துறையில் தற்போது 20 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களில் ஏறக்குறைய 5,000 இலங்கை மருத்துவர்கள் இந்தப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளதுடன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முடிவை எடுக்கக் காத்திருக்கின்றனர்.
வெளியேறுபவர்களில் அதிக எண்ணிக்கையிலான நிபுணர்கள், முக்கியமாக அவசரகால மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளடங்குகின்றனர்.
இதற்கிடையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், இங்கிலாந்து (England), அவுஸ்திரேலியா (Australia), அமெரிக்கா (United States) போன்ற நாடுகளுக்கு கட்டாயப் பயிற்சிக்காகச் சென்றவர்களும் நாட்டுக்கு திரும்பி வர விரும்பவில்லை.
இலங்கையுடன் ஒப்பிடுகையில் அந்த நாடுகளில் அவர்களுக்கு வழங்கப்படும் அதிக சம்பளமே இதற்கு பிரதான காரணமாகும். மத்திய கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால், அங்கு மருத்துவர்கள், இலங்கையில் பெறும் சம்பளத்தை காட்டிலும் கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாக சம்பளத்தை பெறுகின்றனர்.
ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியாவில், இந்த சம்பளம், சுமார் 20 முதல் 30 மடங்கு அதிகமாகும் என்றும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.