இலங்கையில் ஆறு மாதத்தில் பல கோடி ரூபாவினை சம்பாதித்த சீனர்
16 May,2024
சீன மொழிபெயர்ப்பாளராக இலங்கைக்கு வந்து உரிமம் இன்றி இரத்தினக்கல் வியாபாரம் செய்து குறுகிய 06 மாத காலத்தில் சம்பாதித்த 36 1/2 கோடி ரூபாவினை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 3 1/2 கோடி ரூபா அபராதம் விதித்த நீதிபதி, இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து 15 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளார்.
இலங்கையில் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபையின் அனுமதிப்பத்திரம் இன்றி வியாபாரம் செய்த சு ஷென் என்ற சீன நாட்டவருக்கே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் 2018 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் வர்த்தகத்தை இலங்கையில் நடத்தியமைக்காக மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான நீண்ட விசாரணைக்குப் பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டுக்கு கேடு விளைவிக்கும் மற்றைய வெளிநாட்டவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் பிரதிவாதியை கடுமையாக தண்டிக்குமாறும் அரசாங்கத் தரப்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இரத்தினக் கற்கள் வர்த்தகம் செய்வதற்கு உரிமம் தேவை என்பது தனது கட்சிக்காரருக்கு தெரியாத காரணத்தினால் குறைந்த தண்டனையை வழங்குமாறும் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.