ஏலத்திற்கு வருகிறது சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்!
29 Feb,2024
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான ஏலங்கள் நேரடியாக நடத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி குறித்த ஏலம் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று, உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏலங்களுக்கு அழைப்பு
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, "சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்ய நாங்கள் ஏலங்களை அழைத்துள்ளோம்.
எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த ஏலம் அழைக்கப்படவுள்ளது.
இது நேரலையில் ஒளிபரப்பப்படும். மதியம் 2 மணிக்குள் ஏலங்களைத் திறந்து மதிப்பீடு செய்யலாம்.
வலுவான முதலீட்டாளர்
இதனை ஆதரிக்க ஒரு தொழில்நுட்பக் குழுவும் உள்ளது. அவர்கள் ஏலங்களை மதிப்பீடு செய்வார்கள்.
இறுதியாக, அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான வலுவான முதலீட்டாளர் வர வேண்டும்.
அத்துடன் விமான நிறுவனத்தின் 6 ஆயிரம் பணியாளர்களின் வேலைகளை பாதுகாப்பதும் அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.