ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா செலவில் விசா: இலங்கை குடும்பத்தினர் கைது
25 Feb,2024
சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா செலவில் போலியான ஆவணங்களை தயாரித்து ‘கிரேக்க’ விசா மூலம் ஐரோப்பிய நாட்டுக்கு தப்பியோடுவதற்கு வருகைதந்திருந்த வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குடும்பத்தினர் சனிக்கிழமை (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாத்தாண்டியாவை வசிப்பிடமாகக் கொண்ட வாகன வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர், அவருடைய மனைவி மேலும் 21 மற்றும் 16 வயதுகளைச் சேர்ந்த அவ்விருவரின் மகன்மார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள தூதரகங்களில் அதிக பணிச்சுமையினால் அந்த நாடுகளுக்கான விசா வழங்கும் செயற்பாடு “குளோபல் விசா வசதி சேவை” என்ற அமைப்பால் செய்யப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த வர்த்தகர் ஒரு தரகரின் ஊடாக இந்தியாவில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு வாக்குறுதி அளித்த பணத்தை கொடுத்து விசாக்களை பெற்றுள்ளார்.
அதன் பின்னர் Gulf Airlines GF-145 விமானத்தில் செல்வதற்காக இந்த வர்த்தகரின் குடும்பத்தினர் சனிக்கிழமை(24) மாலை ஐந்து மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பின்பு வளைகுடா விமான சேவை அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதற்காக சமர்ப்பித்த ஆவணங்களில் "கிரேக்க" விசாக்கள் குறித்து சந்தேகம் அடைந்து அவர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் இந்த விசாக்கள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வர்த்தகர் தனக்கு நேர்ந்ததை அதிகாரிகளிடம் கூறியதோடு "கிரேக்க" விசாக்களை ஏற்பாடு செய்த தரகரும் இவ்வாறு பணம் பெற்று மேலும் 20 பேருக்கு "கிரேக்க" விசா வழங்கியதாக மற்றுமொரு தகவலையும் தெரிவித்துள்ளார்.
இதன்படி குடிவரவு குடியகழ்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.