தாமதமடையும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்கள்! வெளியான காரணம்
02 Feb,2024
சிறிலங்கன் எயர்லைன்ஸ் இன் விமானங்கள் தாமதமாவதற்கு தொழில்நுட்ப கோளாறுகளே காரணம் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் நட்டால் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கன் எயர்லைன்ஸ் இன் விமானங்களில் ஏற்படும் கால தாமதம் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு விமான சேவையிலும் தாமதம் ஏற்படுவது வழக்கம், ஆனால் இங்கு தாமதம் ஏற்படுவதை மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கிறார்கள் என்றார்.
உதாரணமாக, கத்தார் எயர்வேஸ் விமானத்தில் தாமதம் ஏற்பட்டால், அது கத்தாரில் உள்ள பத்திரிகைகளில் தெரிவிக்கப்படவில்லை, ”என்று சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கன் எயர்லைன்ஸ் சரியான நேரத்தில் தனது செயற்பாடுகளை சிறப்பாக செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
விமானங்களின் பாகங்களில் சில தேய்மானங்கள் ஏற்படும் போது அவற்றை மாற்றம் செய்ய வேண்டும், அவ்வாறு உதிரிப்பாகங்களை பெற்றுக்கொள்வதில் தற்போது சிரமங்கள் ஏற்பட்டிருப்பதை கடந்த ஆண்டு டிசம்பரில் கூட தெரியப்படுத்தியிருந்தோம்.
இந்தப் பிரச்சினைகளில் இருந்து நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால், ஒவ்வொரு முறையும் நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது, அதை சரிசெய்ய அதிக நேரம் எடுக்கும். இப்போது, இது அனைவருக்கும் நடந்துள்ளது, எனவே இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும், அதை விடுத்து நிறுவனத்தை குறை கூறுவதில் அர்த்தம் இல்லை என்பதை அவர் மேலும் தெரியப்படுத்தினார்.
விமான கால தாமதத்திற்கான காரணங்கள் மீண்டும் சரிசெய்யப்படும் அதுவரை வீணே குறை கூறுவதை நிறுத்த வேண்டும் என அவர் மேலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.