இலங்கையில் முதல் முறையாக நாளை ஜல்லிக்கட்டு போட்டி, குவியும் ரசிகர்கள்!
06 Jan,2024
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் அண்டை நாடான இலங்கையிலும் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ளது.
தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்ட வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. அந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றிணைந்து போராடி நொறுக்கி மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தது.
மதுரை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே நடந்து வந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் அதற்கு விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு தற்போது தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலுமே நடைபெற்று வருகின்றன.
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உலகமெங்கும் இருந்தாலும் நம் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இணையான ஆர்வம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் இருக்கிறது. அப்படி ஒரு ஜல்லிக்கட்டு ஆர்வலரான இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு களத்தில் அவரது காளைகளும் ஆண்டுதோறும் களமிறங்கும்.
கடந்த ஆண்டு அவர் திருச்சிக்கு வந்தபோது இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார். அதனை இந்த ஆண்டு நடைமுறைப் படுத்தியுள்ளார். அவரது தலைமையில் சுற்றுலா துறை சார்பில் நாளை முதல் ஒரு வாரம் பொங்கல் விழா இலங்கையில் நடைபெற உள்ளது.
அந்த விழாவின் முதல் நிகழ்வாக ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை (ஜன.6) காலை 10 மணிக்கு திரிகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 200 காளைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற செந்தில் தொண்டமான் பெரும் முனைப்புடன் ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இலங்கையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் திரிகோணமலை வந்துள்ளனர்.
தமிழரின் வீர விளையாட்டு தமிழரின் ஆட்சிப் பகுதியாக ஒரு காலத்தில் இருந்த இலங்கையிலும் தொடங்கியிருப்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.