நாடு பொலிஸ் இராச்சியமாக மாறுகின்றதா, மனோ கணேசன் கேள்வி
11 Dec,2023
.
இந்த நாடு பொலிஸ் இராச்சியமாக மாறுகின்றதா என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (11.12.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கொழும்பின் சில பகுதிகளில் பொலிஸார் பதிவு நடத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
.
குறிப்பாக கிருலப்பனை, தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, முகத்துவாரம், மட்டக்குளி போன்ற பகுதிகளில் தமிழ் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பொலிஸ் பதிவு உடன் நிறுத்தப்பட வேண்டுமென மனோ கணேசன் கோரியுள்ளார்.
.
இந்த பதிவு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் படிவங்கள் அனைத்துமே சிங்கள மொழியில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிங்கள மொழியிலான ஆவணங்களை வழங்குவது அரசியல் அமைப்பினை மீறும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் ஏன் இவ்வாறு தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பதிவு மேற்கொள்கின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
.?
இந்த நாடு ரணில் விக்ரமசிங்கவின் பொலிஸ் இராச்சியமா அல்லது டிரான் அலசின் பொலிஸ் இராச்சியமா அல்லது தேசபந்து தென்னக்கோனின் பொலிஸ் இராச்சியமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
.
இந்த படிவத்தில் இனம், மதம் போன்ற விபரங்கள் பற்றி கோரப்பட்டுள்ளதாகவும் ஏன் மதத்தை அறிந்து கொண்டு பண்டிகை காலத்தில் பொலிஸார் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க போகின்றார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இந்த பொலிஸ் பதிவுகள் உடன் நிறுத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
நாட்டில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறுகின்றார், நாட்டில் பயங்கரவாதம் இல்லை என்கிறார்கள் அவ்வாறான ஓர் நிலையில் ஏன் பொலிஸ் பதிவு செய்கின்றீர்கள் என மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.