மொட்டு ராஜபக்ச பிரிந்ததை ஊடகங்களுக்கு அறிவித்தார் ரணில்
23 Nov,2023
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சர்களும் அவரது சகாக்களும் காரணமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அது தொடர்பில் மனம் வருந்துவதும் மக்களிடம் மன்னிப்பு கோருவதும் அவர்களது தனிப்பட்ட விருப்பமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்கள் ஆட்சியில் இருந்த போது பொருளாதார நெருக்கடி தீவிரடைந்திருந்தாலும், முழுமையாக அவர்கள் மாத்திரம் இதற்கு காரணமென கூற முடியாதெனவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் இந்த நெருக்கடிக்கு காரணமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவதில் ஏற்பட்ட தாமதம், முன்னாள் பிரதமரின் பதவி விலகலை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அந்த பொறுப்பை ஏற்க மறுத்தமை உள்ளிட்ட பல விடயங்களும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக திகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது பொதுஜன பெரமுன இரண்டாக பிரிந்துள்ளதாகவும், அதில் ஒரு தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் மற்றைய தரப்பினர் தம்முடனும் இணைந்து செயல்படுவதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.