ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்தாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது - ரவூப் ஹக்கீம்
16 Nov,2023
,
,
நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
அத்துடன் புத்தர் தெரிவித்த சகவாழ்வு கதையை தெரிவித்த ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த முறையைவிட அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தமீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த வரவு செலவு திட்டம் டிஸ்டி லேன் போன்றது என எரான் விக்ரமரத்ன தெரிவித்திருந்தார். இதற்கு ஜனாதிபதி கடந்த தினம் பதிலளித்திருந்தார்.
அதாவது டிஸ்டிலேனில்தான் இருப்பதாக எங்களை பயமுறுத்தி இருக்கிறார். நாட்டு மக்களை ஜனாதிபதி ராேலன்ஸ் கேஸ்டில் கொண்டு செல்கிறார்.
அது மேலே செல்லும் கீழே செல்லும். அவ்வாறே நாட்டு மக்களை ஜனாதிபதி மேலே கீழே கொண்டு செல்கிறார். ஆனால் அதன் சக்கரம் அங்குமிங்கும் செல்லும்போதுதான் மக்கள் அச்சப்படுகின்றனர். மக்களை அச்சுறுத்திக்கொண்டு செல்வதையே ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் ஜனாதிபதி தனது வரவு செலவு திட்ட உரையின்போது புத்த பெருமான் தெரிவித்த சகவாழ்வு போதனை ஒன்றை தெரிவித்திருந்தார்.
சிக்கனமாக வாழ்ப்பழகிக்கொள்ள வேண்டும் என்பதையே இதன் மூலம் அவர் தெரிவிக்க வருகிறார். ஆனால் வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே இந்த முறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கல்விக்கு கடந்த முறையைவிட குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் கொள்கைக்கமைய நாட்டின் மொத்த வருமானத்தில் 5வீதம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இம்முறை 2சதவீத்துக்கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நாட்டை அபிவிருத்தி செய்ய ஆரம்பமாக மோசடிகளை நிறுத்த வேண்டும். சீனி மோசடி தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.
கோத்தாபய ராஜபக்ஷ் அன்று சீனிக்கான வரியை ஒரு இரவில் 50 ரூபாவில் இருந்து 25 சதத்துக்கு குறைத்தார். குறிப்பிட்ட ஒருசில வியாபாரிகளுக்காகவே இதனை அவர் செய்தார். ஆனால் தற்போது ரணில் விக்ரமசிங்க 25 சதத்துக்கு இருந்த வரியை ஒரு இரவில் 50 ரூபாவாக அதிகரித்துள்ளார். இதனால் ஒரு சில சீனி இறக்குமதியாளர்கள் நன்மையடைகிறார்கள்.
அதேபோன்று சம்பிக்க ரணவக்க தலைமையிலான வழிவகை குழுவில் பல மோசடிகள் தொடர்பில் வெளிப்பட்டிருந்தன. ஆனால் இந்த மோசடிகள் எதற்கும் நடவடிக்கை எடுக்காமல் எப்படி நாட்டை நாட்டை கட்டியெழுப்ப முடியும் என கேட்கிறேன் என்றார்.