இலங்கையின் வளங்கள் அரசியல் காரணங்களுக்காக பிறநாடுகளுக்கு தாரைவார்க்கப்படுவதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டதை போல தற்போது திருகோணமலை துறைமுகமும் வழங்கப்படும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அனுராதா யஹம்பத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தல்கள்
இலங்கைக்கு வெளிநாடுகளிடமிருந்து பாரிய அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் அவற்றுள் அதிகளவானவை திருகோணமலையை இலக்காக கொண்டுள்ளதாகவும் அனுராதா யஹம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலையின் பெறுமதியை இலங்கையர்கள் அறிந்திராவிட்டாலும் அதனை வெளிநாடுகள் நன்கு அறிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் இரண்டாவது இடத்தை திருகோணமலை துறைகம் பிடித்துள்ளதை நினைவூட்டிய அனுராதா யஹம்பத், அதில் தற்போது இந்தியா முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் சிறிலங்கா அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், திருகோணமலை துறைமுகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா, அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பானுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர்களுக்கு வாய்ப்பு
இலங்கைக்கு முதலீடுகள் தேவை என்பதை தாம் ஏற்றுக் கொண்டாலும் அதற்கான வாய்ப்புக்கள் விரிவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையிலுள்ள முதலீட்டாளர்களுக்கு திருகோணமலை துறைமுகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம்
கடந்த 2019 ஆம் ஆண்டு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு சிறிலங்கா அரசாங்கம் சீனாவுக்கு வழங்கியிருந்தததாகவும் தற்போதைய அதிபரும் அப்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் நினைவூட்டியுள்ளார்.
இந்த துறைமுகத்தில் தற்போது பல வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதிலிருந்து இலங்கைக்கு எந்தவொரு பலனும் கிடைப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு பாரிய வருமானத்தை ஈட்டக்கூடிய வகையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட்டாலும், ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அது சீனாவுக்கு வழங்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹம்பந்தோட்டையிலுள்ள பெருமதிமிக்க சொத்தை இலங்கை இழந்தது போல தற்போது திருகோணமலை துறைமுகத்தையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனுராதா யஹம்பத் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது