சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம்!
22 Oct,2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது ” என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மயிலத்தமடு> மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி மட்டக்களப்பு, திம்புலாகல சிங்கள கிராமத்தில் வாழும் சிங்கள மக்களை வெளியேற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.
மயிலத்தமடு பண்ணை மேய்ப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு மாற்றுத்திட்டங்களை செயற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிங்களவர்கள் அப்பகுதியில் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இருந்துகொண்டு ஒரு தரப்பினர்கள் செயற்படுவதால் மாற்றுத்திட்ட அமுலாக்கம் தடைப்பட்டது.
மட்டக்களப்பு திம்புலாகல பகுதியில் வாழும் சிங்களவர்கள் யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டார்கள். யுத்த காலத்தில் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் பொலன்னறுவை, ஹபரன மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்தார்கள். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் உரிய ஆவணங்களுடன் திம்புலாகல பகுதியில் சிங்களவர்கள் மீண்டும் குடியேறினார்கள்.
மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணை மேய்ப்பாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக திம்புலாகல பகுதியில் வாழும் சிங்களவர்களை வெளியேற்றுமாறு குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்களவர்களை அவர்களின் பாரம்பரிய கிராமத்தில் இருந்து வெளியேற்ற எவருக்கும் அதிகாரமில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்களவர்கள் வாழக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு தமிழ் அரசியல் தரப்பினர் செயற்படுவதால் முரண்பாடற்ற தீர்வு காண முடியாமல் உள்ளது. பிரச்சினைகள் நீண்டு செல்கிறது என்றார்.