உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச பரிவர்தனை ஆலோசகரின் ஆலோசனையின் கீழ் இலங்கை விமான சேவையை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 2024 பெப்ரவரிக்குள் இலங்கை விமான சேவை முற்றாக மறுசீரமைக்கப்படும் என்று துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கை விமான சேவை இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 22 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், முழுமையான மறுசீரமைப்பின் ஊடாகவே இலங்கை விமான சேவையை பாரிய இலாபமீட்டும் நிறுனமாக மாற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை விமான சேவைகளை நிர்வகிப்பதற்கு போதுமானளவு விமான எரிபொருள் எம்வசமுள்ளது. இதனை இறக்குமதி செய்வதற்கு தனியார்துறையினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவை அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட மதிப்பாய்வில் இலங்கை விமான சேவைக்கு 90 புள்ளிகள் வழங்கப்பட்டு, பாதுகாப்பான சிறப்பான சேவை கொண்ட விமான சேவையாக இலங்கை விமான சேவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
விமான சேவைகள் அதிகரிப்பு
சீனாவிலிருந்து வரும் விமானங்களின் எண்ணிக்கை ஐந்தாகவும், எமிரேட் விமானங்களின் எண்ணிக்கை வாரத்துக்கு 28ஆகவும், எதியாட்ஸ் 6ஆகவும், கட்டார் விமானங்கள் 35ஆகவும், எயா அரேபியா 11ஆகவும், எயா இந்தியா 17ஆகவும், சசீரா 4ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே போன்று பளாலி விமான நிலையத்துக்கு வாரத்துக்கு 3 விமானங்கள் மாத்திரமே வந்தன. எனினும் தற்போது வாரம் முழுவதும் விமானங்கள் வருகை தருகின்றன.
விமானப்பயணிகள் வருகை
2020 மற்றும் 2021இல் கொவிட் தொற்றின் காரணமான விமானப்பயணிகளின் வருகை பாரியளவில் வீழச்சியடைந்திருந்தது. எனினும் அந்த நிலைமையில் தற்போது படிப்படியாக முன்னேற்றம் ஏற்படுகிறது. கடந்த ஜுனில் 216 067 விமானப்பயணிகள் வெளியேறியுள்ளதோடு, 256 091 வருகை தந்துள்ளனர். அதற்கமைய கடந்த ஜூன் முதல் தற்போது வரை விமானப்பயணிகளின் வெளியேற்றம் மற்றும் வருகை 200 000 - 300 000 வரை உயர்வடைந்துள்ளது.
நவீனமயப்படுத்தல் செலவுகள்
விமான நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்காக பல மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்பாடல் கட்டமைப்பு நவீனமயப்படுத்தலுக்காக 528 மில்லியன் ரூபாவும், விமானசேவை தகவல் தொடர்பாடல் கட்டமைப்புக்காக 1.2 பில்லியனும், விமான தொடர்பாடல் முகாமைத்துவத்துக்காக 1.2 பில்லியனும், சுய காலநிலை கண்காணிப்பு கட்டமைப்புக்காக 306 மில்லியனும், விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்கல் கட்டமைப்புக்கு 874 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளது.
விமான சேவையின் இலாப, நஷ்டம்
இலங்கை விமான சேவை 2013இல் 3.5 பில்லியன், 2014இல் 3.4 பில்லியன், 2015இல் 817 மில்லியன், 2016இல் 6.9 பில்லியன், 2017இல் 8.7 பில்லியன், 2018இல் 5.3 பில்லியன், 2019இல் 10.9 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது. எனினும் 2020இல் 2.5 பில்லியன், 2021இல் 2.8 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் மீண்டும் 2022இல் 4.8 பில்லியன், இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 22 பில்லியன் இலாபத்தை இலங்கை விமானசேவை ஈட்டியுள்ளது. இதில் 10 பில்லியன் எமது அமைச்சினால் திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு 1.4 பில்லியன் கடனும் மீள செலுத்தப்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையம்
மத்தள விமான நிலையம் இன்றும் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனை ஓரளவு சமநிலைப்படுத்தியுள்ள போதிலும், அது போதுமானதாக இல்லை. எனவே மத்தள விமான நிலையத்துக்காக புதிய முதலீட்டாளர்களை எதிர்பார்க்கின்றோம். இதன் ஊடாக நஷ்டத்தை குறைக்க முடியும் என்று நம்புகின்றோம்.
இலங்கை விமானசேவை மறுசீரமைப்பு
கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இலங்கை விமான சேவையை மறுசீரமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு அந்த யோசனை திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திறைசேரி மாத்திரமின்றி உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பனவும் இது தொடர்பில் அவதானம் செலுத்தின. இவர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கமைய சர்வதேச பரிவர்த்தனை ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. உலக வங்கியுடன் தொடர்புடைய நிறுவனத்தின் கீழ் இந்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவரால் இலங்கை விமான சேவையை மறுசீரமைப்பதற்கான விலைமனுகோரல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படும்.
இம்மாத இறுதியில் இலங்கை விமான சேவையை மறுசீரமைப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தலை கோரவுள்ளதோடு , அந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும் என குறித்த ஆலோசகர் எமக்கு உறுதியளித்திருக்கின்றார். அதற்கமைய 2024 பெப்ரவரிக்குள் இலங்கை விமான சேவையை முழுமையாக மறுசீரமைக்க முடியும் என்றார்.