இலங்கை அரசு சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாதது: சந்திரிகா பகிரங்கம்
07 Oct,2023
.
இலங்கை அரசு விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளது என ஊடகங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒரு தரப்பினர் இந்த அரசில் அங்கம் வகிக்கின்றனர்.
அதேவேளை, மற்றொரு தரப்பினரை இந்த அரசு பாதுகாத்து வருகின்றது.
.
இப்படியான அரசு எப்படி சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கமாட்டோம் என்று வெளிநாடுகளுக்கும், சர்வதேச அமைப்புக்களுக்கும் எவ்வாறு சவால் விட முடியும்?
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச விசாரணைக்கு அனுமதி வழங்கமாட்டேன் என்று கூறினாலும், இறுதியாகப் பதவிகளில் இருந்த மூன்று ஜனாதிபதிகளும் (மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச) சர்வதேசம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பானவர்கள்.
.
தற்போது அவர்கள் யாரின் பாதுகாப்பில் உள்ளார்கள்? எனவே, தற்போது ஜனாதிபதிப் பதவியில் இருப்பவரும், அவர் தலைமையிலான அரச தரப்பினரும் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.