மரணக்கயிறாக மாறப்போகும் சனல் 4 : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
22 Sep,2023
அரசாங்கத்தை தாக்குவதாக கூறி, இராணுவத்தினரையும் எமது தாய்நாட்டையும் தாக்குவதற்கு இடமளிக்க முடியாது என்றும் சனல் 4 கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என்ற எச்சரிக்கையை விடுப்பதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோருபவர்கள் சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பு இங்கே வந்தது. அவுஸ்திரேலியா பெடரல் காவல்துறை வந்தது. அவர்கள் இங்கே விசாரணை நடத்தி அறிக்கையை முன்வைத்துள்ளனர். ஏன் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேட்கின்றோம்.
இதேவேளை இந்தப் பிரச்சினைகளை மேற்குலக நாடுகளில் இருந்துகொண்டு இங்கே பிரிவினை வாதத்திற்கு முயல்பவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் இரத்தம் மற்றும் கண்ணீரை அரசியல் இலாபத்திற்காக மாற்றுவதற்கு கீழ்த்தரமான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இராணுவத்தினரை பலவீனமானவர்களாக்கி
2001 - 2004 காலத்தை போன்றும் 2015 காலத்தை போன்றும் புலனாய்வுத்துறையை வீழ்ச்சியடைய செய்து, இராணுவத்தினரை பலவீனமானவர்களாக்கி மீண்டும் நாட்டை இரத்த வெள்ளத்திற்குள் தள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது” என்றார்.