மனிதப்புதைகுழி அகழ்பணியில் ஐ.நா கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும் –
04 Sep,2023
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகளில் இருக்கக்கூடுமென சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எனவே செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுக்கப்படவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்றும், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழி அகழ்வுகளை சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை செவ்வாய்கிழமை (5) மேற்கொள்வதென முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி இப்புதைகுழி அகழ்வின்போது பின்பற்றப்படவேண்டிய நியமங்கள் மற்றும் இதனை அடிப்படையாகக்கொண்ட அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டுமெனக் கேள்வியெழுப்பியபோதே அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.மனிதப்புதைகுழி விவகாரங்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனடிப்படையிலேயே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் இப்புதைகுழிகளில் இருக்கக்கூடுமென சுட்டிக்காட்டிய அவர், தற்போது கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இந்நடவடிக்கைகள் உரியவாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் முன்னின்று செயற்பட்டதைப்போன்று, ஏனைய மனிதப்புதைகுழி அகழ்வு விவகாரங்களிலும் உரியவாறு செயற்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளுக்கான நிதியொதுக்கீட்டை வலியுறுத்துவதில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் முன்னின்று செயற்பட்டதாகவும், அதன்மூலம் இப்பணிகளுக்கென 57 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி ஜெ.தற்பரன் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேவேளை இவ்விடயம் குறித்துக் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது என்று குறிப்பிட்டதுடன் எனவே இவ்விசாரணைகள் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்களின் பங்கேற்புடன் நடைபெறவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
அத்தோடு இதுபற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகளிடம் தாம் வலியுறுத்தியிருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் பின்னணியில் கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகளைக் கண்காணிப்பதற்கு ஐ.நா அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்