திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் - சதித்திட்டங்களை மக்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல. இது ரணிலின் ஆட்சி.
எந்தச் சதித்திட்டங்களுக்கும் இங்கு இடமில்லை. மக்களுக்காகவே நாட்டை பொறுப்பேற்றேன். அதிபர் பதவியை ஏற்றேன்.
எந்தத் தடைகள் வந்தாலும் மக்கள் பலத்துடன் அதனைத் தகர்த்தெறிந்து நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக மீட்டெடுப்பேன்.
நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன். கஷ்டப்படும் மக்கள் மீண்டெழுவார்கள். மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காண்பேன். என தெரிவித்துள்ளார்.
மேலும், மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்று அதிபர் அரியாசனத்தில் ஏறிய கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டை சீரழித்து சின்னாபின்னப்படுத்தி சிங்கள மக்களின் கோபத்திற்கு ஆளாகி ஆட்சிக்கதிரையை விட்டு ஓடி நாடு நாடாக சுற்றித்திரிந்தது வரலாறு.
ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படு தோல்வியடைந்து கட்சிக்கு கிடைத்த விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க, இன்று நாட்டின் அதிபராகியமை அவருக்கு அடித்த அதிஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.
கடும் பொருளாதார சிக்கலில் இருந்த நாட்டை ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட வைத்தவர் ரணில் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
எரிபொருளுக்கு வரிசை, அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசை என எல்லாவற்றுக்குமே இருந்த வரிசை யுகத்தை மாற்றி மக்களை ஓரளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீட்டவர் அவர்தான்.
இந்த நிலையில் அவர் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி அதிகாரங்களை தர மாட்டேன் என்பதுவும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்கும் என கூறுவதும் தான் தமிழர் பிரதிநிதிகளை கொதிப்படைய வைத்துள்ளது.
கடந்த நல்லாட்சி அரசில் மைத்திரிபால சிறிசேன அதிபராகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்தபோது எவ்வித முன்நிபந்தனையும் இல்லாமல் அந்த ஆட்சியின் இறுதிக்காலம் வரை முண்டுகொடுத்து ஆட்சிக் கதிரையை அவர்கள் நடத்தி முடிக்கும் வரை ஆதரவு வழங்கிய தமிழ் பிரதிநிதிகளுக்கு ரணில் நல்லவர்.
ஆட்சிக்காலத்தின் இறுதிக்காலத்தில் மைத்திரியின் அரசியல் விளையாட்டால் 50 நாட்கள் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது அவரை விரட்டி மீண்டும் ரணிலை பிரதமராக்கியபோது ரணில் நல்லவர்.
வடக்கிற்கு அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு ரணில் வந்தபோது அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து ஊடகங்களில் புன்முறுவலுடன் அவர்களின் படம் வரும்போது ரணில் நல்லவர்.
இப்போது அதிபராகி 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ரணில் கதைத்தால் அவர் கெட்டவர்.
ஐந்து வருட ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டமும் இல்லை. இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சியும் இல்லை.ஆனால் பொங்கலுக்கு தீர்வு,தீபாவளிக்கு தீர்வு எனும்போது மட்டும் ரணில் நல்லவர்.
இப்போது மட்டும் ரணில் கெட்டவர்.
இதில் உண்மை எது ரணில் நல்லவரா கெட்டவரா...!