சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் மாபெரும் போராட்டம்
11 Jul,2023
நாடாளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே! உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை தாங்கியவாறு அமைதி வழியில் நாடாளுமன்றில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடமாகாண சட்டத்தரணிகள் இணைந்து கண்டண போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பிரதேசத்தில் கடந்த 04.07.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா களவிஜயத்தை முன்னெடுத்த போது அங்கு வருகை தந்த சரத் வீரசேகர கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களை அந்த இடத்தில் தெரிவிப்பதற்கு நீதிபதி அனுமதி மறுத்திருந்தார்.
இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிச் சென்ற சரத் வீரசேகர கடந்த 07.07.2023 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, தமிழ் நீதிபதிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் தமிழ் நீதிபதிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம்(11) முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணி விலகல் போராட்டத்தை மேற்கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளோடு இணைந்து வடக்கினுடைய ஏனைய மாவட்டங்கள், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டத்தரணிகள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் நாடாளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே!, நீதித்துறை சுதந்திரம் ஓங்குக!, கௌரவ நீதிபதிகளின் கடமைகளில் தலையிடாதே!, நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே !, தலையிடாதே! தலையிடாதே! நீதித்துறையின் சுதந்திரத்தில்!, நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா?, சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நட ! போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையிலே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100 வரையிலான சட்டத்தரணிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.