அண்மைக்காலமாக சில பிக்குமார்களின் பாலியல் செயற்பாடுகள் பௌத்த துறவறத்திற்குப் பெறும் அவமதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
தூய்மையான துறவறத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் புத்தர் மக்களுக்கு போதித்துள்ளார். பௌத்த துறவற வாழ்க்கை ஒரு ஆழமான நோக்கத்தையும் அர்த்தத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட பௌத்த துறவிகள் சிலர் பௌத்த விழுமியங்களையும் பௌத்த ஒழுக்கத்தையும் அடக்கி ஆளாமல் பாலியல் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது திணித்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
அந்த வகையில் 8ஆம் திகதி கொழும்பு, நவகமுவை பிரதேசத்தில் விகாரையொன்றுக்குள் வைத்து ஒரே நேரத்தில் தாய், மகள் ஆகியோருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பிக்கு மற்றும் குறித்த இரண்டு பெண்கள் மீது குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டது.
சட்டத்தின் கடமை
இதன்போது இரண்டு பெண்களும் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு அதனைக் காணொளியை எடுத்து வெளியிட்டனர். நான்கு சுவருக்குள் நடந்த அந்தரங்கத்தைக் காணொளியாக எடுத்து இன்று உலகம் பார்க்கும் அளவிற்கும் அதனைப் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது பௌத்த பிக்குவுடன் தகாத உறவில் இருந்த இரு பெண்கள் செய்த செயல் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அவர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை வழங்குவது சட்டத்தின் கடமையாகும். இவ்வாறு நாட்டையே முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இது தொடர்பில் அரசு மௌனமாக இருந்து வருகின்றது. புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காகவும் நல்லொழுக்கமுள்ள பௌத்த சமுதாயத்தைப் பேணுவதற்காகவும் பௌத்த சாசன அமைச்சு பெருமளவிலான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் கூறியுள்ளது.
கலாசார அழிவுகளை ஏற்படுத்தும்
அதேவேளையில் பௌத்த சமயக் கட்டளைச் சட்டத்துடன் தொடர்புடைய விடயங்களைக் கவனிப்பதாகவும் பௌத்த சாசன அமைச்சு தெரிவித்து வருகின்றது. ஆனால் தற்போது நடக்கும் சில பிக்குமாரின் பாலியல் செயற்பாடுகள் குறித்து இன்னும் அரசு வாய் திறக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
சிங்கள- பௌத்த நாடு எனக் கூறும் இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளால் தமது இனத்தின் இருப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறான செயற்பாடுகளால் மத கட்டுப்பாடு, ஒழுக்கம், கலாசார அழிவுகளை ஏற்படுத்தும். அதனை அரசு கண்டிக்கவேண்டும்.
இல்லையென்றால் சிங்கள- பௌத்த மதம் சார்ந்த கலாசாரத்தில் பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிடும். உலகில் பலராலும் விரும்பப்படும் பௌத்தம் இலங்கையில் பெரும் கறையைச் சுமக்க வேண்டி இருக்கும்.
இச்சையான செயல்
அரசு பௌத்த மதம் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது காலத்தின் கட்டாயம். மேலும் அரசாங்கம் பிக்குமார்களுக்குகென தனியான ஒரு ஒழுக்காற்றுக் குழுவை நியமித்து பாலியல் சேட்டைகளில் ஈடுபடும் பிக்குமார்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புத்தரின் போதனைகளை நான்கு உயர் உண்மைகள் என்று பெளத்தர்கள் அழைக்கின்றனர்.
முதலாவது உண்மை மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.
இரண்டாவது உண்மை அந்த துன்பத்திற்குக் காரணம் தன்னலமும், ஆசையும்.
மூன்றாவது உண்மை மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.
நான்காவது உண்மை மனிதன் தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு. என்பனவாகும்.
இவ்வாறான போதனைகளை வழங்கியும் பௌத்த பிக்குகள் சிலர் இச்சையான செயலில் சிக்கிக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.