இலங்கையை மையப்படுத்திய புவியியல் அரசியல் போட்டி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த வகையில், ஹம்பாந்தோட்டை பகுதியில் தான் குத்தகைக்கு எடுத்த துறைமுகத்துக்கு அருகில் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் இலங்கையில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஆரம்பிக்கும் ஆர்வத்தை சீனா தீவிரமாக வெளிப்படுத்தியுள்ளது.
பொருளாதார ரீதியில் வங்கரோத்தடைந்த இலங்கையை மீட்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை அதிகமாக எதிர்பார்க்கும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீனா “இலங்கையின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆலை என்ற பெயரில் தெற்கில் குந்தத் தலைப்படுகிறது.
சீனா இப்போது இந்த விடயத்தில் தீவிரமாக முயல்கின்றது. இதற்காக சிறிலங்கா அரசாங்கத்துடன் கமுக்கமாக பேச்சுக்களையும் நடத்தி வருகிறது.
இந்தப் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்க வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டியிட்டாலும், தற்போது சீனாவின் அரச நிறுவனமான சிநோபெக் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான விக்ரோ ஆகிய எரிபொருள் நிறுவனங்களிடமே இதற்கான முன்மொழிவு கோரிக்கைகளை சிறிலங்கா கோரியுள்ளது.
அதாவது இந்த இரண்டு நிறுவனங்களைத் தவிர ஏனைய நிறுவனங்கள் இந்தப் போட்டியில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
இந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்று சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனமாக இருந்தாலும், இந்தப் போட்டியின் இறுதி வெற்றியாளராக சீனாவின் அரச நிறுவனமான சிநோபெக் வெற்றியடையும் என்றுதான் ஊகிக்கப்படுகிறது.
ஏனென்றால் சிறிலங்கா சீனாவின் பக்கமே அதிகமாக சாரும் என்பதை நீங்களே சுலபமாக ஊகித்துக்கொள்ளலாம்.
இந்த வருடத்தின் இறுதிக்கிடையில் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு செல்லவுள்ள நிலையில், ஏற்கனவே இது தொடர்பான பேச்சுக்களை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் தங்கி இருந்தபோது நடத்தி இருக்கின்றார் .
4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் இலங்கையில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க ஆர்வப்படும் சீனா இந்த நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு அப்பால் செல்லக்கூடிய கடல் வழி எண்ணெய் வணிகத்தை கையகப்படுத்த முயல்வதும் பகிரங்கமாக தெரிகின்றது.
சீனாவின் இந்த நகர்வு இந்தியாவுக்கு பாரிய அழுத்தத்தை கொடுக்கும் என எதிர்வுகூறப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, இலங்கையின் தெய்வேந்திரமுனைக்கு அருகில் உள்ள காடுகளில் சீனா ராடர் தளமொன்றை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றது என இந்தியாவின் இந்தியன் டைம்ஸ் எக்கனமிக் டைம்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்த ராடர் கூடங்குளம் மற்றும் கல்ப்பாக்கம் அணுமின் நிலையங்களை கண்காணிக்க சீனாவிற்கு உதவியாக அமையும் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் அக்கடமி ஒவ் சயன்சின் ஏரோஸ்பேஸ் இன்பர்மேசன் ரிசேர்ச் இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள இந்தியாவின் இந்தியன் டைம்ஸ் எக்கனமிக் டைம்ஸ் இந்ததிட்டம் பிராந்தியத்தில் இந்தியாவின் மூலோபாய நலன்களிற்கு ஆபத்தானதாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அந்தமான்நிக்கோபார் தீவுகளிற்கு செல்லும் இந்திய கடற்படையின் கப்பல்களை சீனா கண்காணிப்பதற்கு இந்த ராடர் உதவும் என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் இந்த ராடரினால் கூடங்குளம் மற்றும் கல்ப்பாக்கம் அணுமின் உலைகளை கண்காணிக்கமுடியும் இந்த பகுதியில் எரிபொருள் மீள்நிரப்பும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் முடியும் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை - பாகிஸ்தான் இராணுவ தொடர்பு
இவ்வாறான அச்சுறுத்தல்கள் இப்படி இருக்க, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் அதிக தொடர்பு காணப்படுவதாக எழுத்தாளரும், நடிகருமான ஜெயபாலன் கூறியிருக்கிறார்.
ஹம்பாந்தோட்டை சீன உக்தியில் பாகிஸ்தானுக்கும் பாரிய பங்கு உண்டென அவர் கூறியுள்ளார்.