தமிழர் விவகாரத்தில் இந்தியா செயற்படவேண்டிய விதம் குறித்து கடிதம் அனுப்பவுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி
02 Jul,2023
வெகுவிரைவில் ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் இந்தியா செயற்படவேண்டிய விதம் குறித்து தெளிவுபடுத்தி இந்தியாவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைக்க இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியா செல்லவிருப்பதாகவும், 21ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள பின்னணியிலேயே, முக்கிய தமிழ் தேசிய கட்சிகளில் ஒன்றான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் வேண்டாம் எனவும், அதனை இந்தியா வலியுறுத்தக்கூடாது எனவும் தொடர்ச்சியாக கூறிவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் மாத்திரமே தீர்வு காண முடியும் என்றும், அதன் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது இதுகுறித்து அவரிடம் எடுத்துக்கூறியதாகவும், 'இந்திய - இலங்கை ஒப்பந்தம் வேறு, அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் வேறு' என்ற விடயத்தை விசேடமாக சுட்டிக்காட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்திய - இலங்கை ஒப்பந்தம்தான் இந்தியாவின் நேரடித் தலையீட்டின் மூலம் உருவாக்கப்பட்டது என்றும், 13ஆவது திருத்தம் என்பது அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்ற பேரில் இலங்கை அரசாங்கத்தினால் ஒருதலைப்பட்சமாக தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், 13ஆவது திருத்தம் தமிழர்களை பாதிப்பதனாலேயே அதனை நிராகரிப்பதாகவும், மாறாக, இந்தியாவை தாம் ஒருபோதும் பகைக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் வெகுவிரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக 13ஆவது திருத்தம் குறித்த தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியும், தமிழர் விவகாரத்தில் இந்தியா செயற்படவேண்டிய விதம் பற்றிய தமது அபிப்பிராயம் குறித்து விளக்கமளித்தும் கடிதமொன்றை அனுப்பிவைக்க இருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.