புலம்பெயர் தமிழர்களிடம் ஜனாதிபதி மன்னிப்புக் கோர வேண்டும் : சாணக்கியன் சபையில்
01 Jul,2023
பொறுப்புக் கூறல் தொடர்பில் புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் கேள்வி எழுப்பியவரை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதி பதிலளித்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (1) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கருத்துரைத்தார்.
அங்கு இடம்பெற்ற ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஒருவர் எழுப்பிய கேள்விக்கு 'ஆங்கிலத்தில் பேசுவது கடினமாயின் தமிழ் மொழியில் பேசுங்கள்' என அவரை அவமதிக்கும் வகையில் கருத்துரைத்துரைத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் அந்த தமிழர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம்.
பொறுப்புக் கூற தொடர்பில் அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.ஆகவே புலம்பெயர் தமிழர்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும்.
ஆனால் இதுவரை முன்னேற்றகரமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஒரு வாரத்துக்குள் பாராளுமன்றத்துக்குள் ஒரு பிரேரணையை கொண்டு வந்து ஆதரவை பெற்றுக்கொள்ள அவரால் முடியுமாயின் ஏன் நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.பிரச்சினைக்கு தீர்வு காணலாம் ஆனால் அதற்கான அக்கறை அவருக்கு இல்லை என்பது புலப்படுகிறது என்றார்.