கோட்டாபயவிற்காக மாதாந்தம் பல இலட்சங்களை வாரி இறைக்கும் அரசாங்கம்!
01 May,2023
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்காக அரசாங்கம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாயை மாதாந்தம் செலவிடுவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
சிறிலங்கா அதிபர் செயலகத்தை மேற்கோள்காட்டி உண்மை தகவல்களை அறிந்து கொள்வதற்கான இணையத்தளமொன்று இந்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டத்தையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்சவிற்கு சிறிலங்கா அரசாங்கம் வழங்கும் செலவுகள் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த விடயம் தொடர்பான உண்மையை அறிந்து கொள்ள, இணையத்தள மொன்று அதிபர் செயலகத்திடம் தகவல்களை கோரியிருந்தது.
அதனையடுத்து, அந்த இணையத்தளத்தின் கோரிக்கைக்கமைய வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்சவின் ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் கடந்த டிசம்பர் மாதம் 9 இலட்சத்து 91 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், தொலைபேசி, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு 3 இலட்சத்து 38 ஆயிரத்து 387 ரூபாய் 60 சதம் செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.