நீதிமன்ற படியேறும் சவேந்திர சில்வா
18 Jan,2023
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு மே 9, 2022 அன்று காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் சேதம் விளைவித்தமை தொடர்பில் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (ஜன. 16) காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பாதுகாப்பு அதிகாரி சவேந்திர சில்வா உள்ளிட்டோருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தங்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அதிகாரத்தை பயன்படுத்துவதில் தவறு நடந்துள்ளதா என்பதை கண்டறியவும் கோரி சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு வந்தது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பாதுகாப்பு அதிகாரி சவேந்திர சில்வா, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உள்ளிட்ட 13 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணதுங்க, ஜனக பண்டார தென்னகோன், எஸ்.எம். சந்திரசேன உள்ளிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 39 உறுப்பினர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.