கொழும்பு - திருச்சிக்கிடையே விமான சேவை
18 Nov,2022
குளிர்கால அட்டவணைக்குப் பிறகு திருச்சி - இலங்கைக்கிடையே டிசம்பர் (08) முதல் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள்
தெரிவிக்கின்றன. திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்துகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி - இலங்கைக்கிடையே தினமும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும் திருச்சியிலிருந்து இலங்கை வழியாக டுபாய்க்குச் சென்று வரும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தினமும் ஏராளமான பயணிகள் இந்தியாவிலிருந்து டுபாய்க்குச் சென்று வருகின்றனர். ஆனால் இயக்கப்படும் இரு விமானங்களில் போதியளவு இருக்கைகள் இல்லாதுள்ளன. இதனால்,திருச்சியிலிருந்து, சென்னை வழியாகவோ அல்லது இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலமாகவோ டுபாய்க்கு சென்று வருகின்றனர்.
இதனை கருத்திற்கொண்டு திருச்சி - இலங்கைக்கிடையே ஃபிட்ஸ் எயார் என்ற இந்த கூடுதல் விமான சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. டுபாய் செல்லும் பயணிகள், திருச்சியிலிருந்து இலங்கை வந்து, அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலம் பயணிக்கலாம். அதேபோல டுபாயிலிருந்து திருச்சி செல்லும் பயணிகளும் இதே வழியில் திருச்சிக்கு செல்லலாம்.
டிசம்பர் எட்டாம் திகதி முதல் தொடங்கப்படவுள்ள இந்த புதிய விமான சேவை, வாரத்தில் வியாழன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படவுள்ளன.